பெத்லகேம்
பெத்லகேம் (Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறித்து பிறந்த இடமாகும். இது பாலஸ்தீனாவில் மேற்குக் கரை (West Bank) என்னும் பகுதியில் உள்ளது. எருசலேமிலிருந்து 8 கி.மீ. தொலையில் அமைந்துள்ள இந்நகரில் ஏறக்குறைய 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவருகின்றனர் [2].
பெத்லகேம், بيت لحم | |
---|---|
ஏனைய transcription(s) | |
• அரபி | بيت لحم |
• Also spelled | Beit Lahm (official) Bayt Lahm (unofficial) |
அதிகார சபை | Bethlehem |
அரசு | |
• வகை | City (from 1995) |
• நிருவாகத் தலைவர் | விக்டர் பட்டர்சே[1] |
மக்கள்தொகை (2007) | |
• Jurisdiction | 25,266 |
பெயர் விளக்கம் | புலால் வீடு (அரபி); அப்ப வீடு (எபிரேயம்) |
இணையதளம் | www.bethlehem-city.org |
பெத்லகேம் நகரின் எபிரேயப் பெயர் "Beit Leḥm" அல்லது Beyt Leḥem (בֵּית לֶחֶם) என்று வரும். அரபியில் அதன் பொருள் புலால் வீடு (House of Meat) என்றும் எபிரேயத்தில் அப்ப வீடு (House of Bread) என்றும் அமையும். இந்நகர் கிரேக்க மொழியில் Βηθλεέμ (Bethleém) என்று அறியப்படுகிறது. இது பெத்லகேம் ஆட்சிமண்டலத்தின் தலைநகர். பாலஸ்தீன மக்களின் கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாகவும் இந்நகர் உள்ளது.
வரலாற்றில் பெத்லகேம்
விவிலியத்தின் முதல் பகுதியாகிய பழைய ஏற்பாட்டில் பெத்லகேம் தாவீதின் நகர் என்று அழைக்கப்படுகிறது. புதிய ஏற்பாடோ பெத்லகேம் நகரில் இயேசு கிறித்து பிறந்தார் என்னும் செய்தியைத் தருகிறது (காண்க: மத்தேயு நற்செய்தி, மற்றும் லூக்கா நற்செய்தி). கிறித்தவ சமூகங்களில் மிகப் பழமையான ஒரு குழுவினர் இந்நகரில் 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர். அண்மைக் காலத்தில் புலம்பெயர்தலின் விளைவாகக் கிறித்தவர்களின் எண்ணிக்கை பெத்லகேமில் மிகவும் குறைந்துவிட்டது.
கி.பி. 529இல் சமாரியர்கள் பெத்லகேமைச் சூறையாடினார்கள். அதை பிசான்சிய மன்னர் முதலாம் ஜஸ்டின் மீண்டும் கட்டியெழுப்பினார். கி.பி. 637இல் கலிபா உமர் இபன் அல்-கத்தாப் என்பவர் அதைக் கைப்பற்றினார். நகரிலிருந்த திருத்தலங்களுக்குச் செல்லும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது. சிலுவைப் போர் வீரர்கள் பெத்லகேமை 1099இல் பிடித்து கோட்டைச் சுவர்கள் எழுப்பினார்கள். மேலும், கிரேக்க வழிபாட்டு முறையை மாற்றி இலத்தீன் வழிபாட்டு முறை புகுத்தப்பட்டது. ஆனால் எகிப்துக்கும் சிரியாவுக்கும் அரசராக இருந்த சலாதீன் என்பவர் பெத்லகேமைக் கைப்பற்றி இலத்தீன் முறைக் குருக்களை வெளியேற்றினார். மம்லுக் குலத்தவர் 1250இல் பெத்லகேமின் சுவர்களைத் தகர்த்தெறிந்தனர். அவை ஒட்டோமான் மன்னர்கள் காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன.
முதல் உலகப்போரின் போது பிரித்தானியர் பெத்லகேம் நகரை ஒட்டோமானியரிடமிருந்து பறித்தார்கள். பாலஸ்தீன நாடு உருவாக்கப்படுவதற்கான ஐ.நா. திட்டத்தின்கீழ் 1947இல் பெத்லகேம் பன்னாட்டுத் தனிப்பகுதியாக மாறுவதாயிருந்தது. ஆனால் யோர்தான் நாடு 1948ஆம் ஆண்டு அரபு-இசுரயேல் போரின்போது பெத்லகேமை இணைத்துக்கொண்டது. 1967ஆம் ஆண்டு நிகழ்ந்த 6 நாள் போரில் இசுரயேல் நாடு பெத்லகேமைக் கைப்பற்றியது. 1995இலிருந்து பெத்லகேம் பாலஸ்தீன தேசிய அதிகாரத்தின் கீழ் (Palestinian National Authority) நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
பெத்லகேமில் வாழ்கின்ற மக்களுள் பெரும்பான்மையோர் இசுலாம் சமயத்தவர். ஆனால், கிறித்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
இங்கு சுற்றுலாப் பயணியரும் திருப்பயணியரும் பெரும் எண்ணிக்கையில் வருகின்றனர். குறிப்பாக, கிறிஸ்து பிறப்பு விழாவின் போது திருப்பயணியர் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும். அப்போது கிறித்தவர் இயேசு பிறந்த இடத்தின்மீது கட்டியெழுப்பப்பட்டுள்ள இயேசு பிறப்புக் கோவிலை சந்திக்கவும் அங்கு இறைவேண்டல் செய்யவும் பெருந்திரளாகக் கூடுவர். பெத்லகேமில் முப்பதுக்கு மேற்பட்ட பயணியர் விடுதிகளும் 300க்கும் அதிகமான கைவேலைப் பொருள் விற்பனைக் கடைகளும் உள்ளன. பெத்லகேமின் வடக்கு நுழைவாயிலில் யூத இன மூதாட்டியும் யாக்கோபின் மனைவியுமான ராகேல் என்பவரின் கல்லறை உள்ளது. இது யூதர்களுக்குப் புனிதமான இடம் ஆகும்.
விவிலியத்தில் பெத்லகேம்
பெத்லகேம் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு. 1400இல் காணக்கிடைக்கிறது. அமர்னா களிமண் சுவடிகள் என்று அழைக்கப்படும் ஏடுகளில் "அபிரு" மக்கள் தொந்தரவு கொடுத்ததால் "பித்-லாஹ்மி" ("Bit-Lahmi") என்னும் இடத்தைக் கைப்பற்றுவதற்கு எருசலேம் மன்னர் தம் மேல்நராக இருந்த எகிப்து மன்னரின் உதவியை நாடும் குறிப்பு உள்ளது. இங்கே "பித்-லாஹ்மி" என்பது பெத்லகேமைக் குறிப்பதாகும்.
"எப்ராத்தா" (Ephrath/Ephratah) என்று பழைய ஏற்பாட்டில் வரும் பெயர் பெத்லகேமின் மறுபெயராகக் காணப்படுகிறது (காண்க: தொடக்க நூல் 35:16, 19; 48:7). இங்குதான் யாக்கோபின் மனைவியும் யூத இன மூதாட்டியுமான ராகேல் என்பவர் இறந்து அடக்கம் செய்யப்பட்டார் (காண்க: தொடக்க நூல் 48:7):
“ | ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன் (தொநூ 48:7) | ” |
எப்ராயிம் குலத்தவருக்கும் எப்ராத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவேளை எப்ராயிம் குலத்தவரே பெத்லகேமை நிறுவியிருக்கலாம்.
கிறித்தவர்கள் இயேசு கிறித்து பெத்லகேமில் பிறந்தார் என்று ஏற்பர். அவர்கள் இயேசுவின் பிறப்பு பெத்லகேமில் நிகழுமென்று இறைவாக்கினர் முன்னறிவித்தனர் என்று நம்புகின்றனர். மீக்கா இறைவாக்கினரின் நூலில்
“ | நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும் இஸ்ரயேலை ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும் (மீக்கா 5:2) | ” |
என்று வருகின்ற பகுதி இயேசுவின் பிறப்பு பெத்லகேமில் நிகழ்ந்ததின் முன்னறிவிப்பு என்பது கிறித்தவர் கருத்து.
பெத்லகேமில் பஞ்சம் ஏற்பட்டது என்றும், பெத்லகேமுக்கு அருகில் இருந்த பள்ளத்தாக்கில் ரூத்து (நூல்) வாற்கோதுமை அறுவடையாளர்களோடு சேர்ந்து வேலை செய்துவிட்டு, தம் மாமியாராகிய நகோமியோடு பெத்லகேம் சென்றார் என்றும் ரூத்து நூல் கூறுகிறது(காண்க: ரூத்து 1:1-5; 2:1-4.
தாவீது மன்னர் பிறந்த இடம் பெத்லகேம் என்பது மரபு. அங்குதான் அவர் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் (காண்க: 1 சாமுவேல் 16:4-13). தாவீது ஒளிந்திருந்த அதுல்லாம் குகை பெத்லகேமுக்கு அருகில் இருந்தது (காண்க: 1 சாமுவேல் 22:1).
பெத்லகேம்: இயேசு பிறந்த ஊர்
இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்று மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இரு நற்செய்தியாளர்கள் பதிவுசெய்துள்ளனர். லூக்கா நற்செய்திப்படி இயேசுவின் பெற்றோராகிய மரியாவும் யோசேப்பும் நாசரேத்து என்னும் ஊரில் வாழ்ந்துவந்தனர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தபோது (இன்றைய கணிப்புப்படி, கி.பி. 6ஆம் ஆண்டு) தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர். தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தம் மனைவி மரியாவோடு பெயரைப் பதிவுசெய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அங்கேதான் மரியா ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்து அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). தன்னுடைய ஆட்சிக்கு உலைவைக்க ஒருவர் பிறந்துவிட்டாரோ என்று அஞ்சிய ஏரோது குழந்தை இயேசுவைக் கொல்ல முயற்சி செய்தான். "ஏரோது பெத்லகேமிலுமமதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்ககு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளையும் கொன்றான்" (மத்தேயு 2:16). குழந்தையின் உயிருக்கு இடர்ப்பாடு ஏற்படலாம் என்றும் அதனால் யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பியோட வேண்டும் என்றும் கனவில் எச்சரிக்கப்பட்டார். பின்னர் திருக்குடும்பம் நாசரேத்தில் குடியேறியது (காண்க:(மத்தேயு 2:19-23).
இயேசு உண்மையிலேயே பெத்லகேமில்தான் பிறந்தாரா என்பதை நிறுவ போதுமான வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெரும்பான்மையான விவிலிய அறிஞர்கள் பெத்லகேமே இயேசுவின் பிறப்பிடம் என்று நிறுவியுள்ளனர். இதற்கான சான்றுகள் மத்தேயு, லூக்கா நற்செய்திகள் தவிர, வேறு பல பழங்காலக் கிறித்தவ எழுத்தாளர்களின் கூற்றுக்களிலிருந்தும் தெரிகின்றன.
தமிழ் இலக்கியத்தில் பெத்லகேம்
வேதநாயகம் சாஸ்திரியார் என்னும் தமிழ்க் கிறித்தவப் புலவர் (1774-1864) பெத்லகேம் குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியம் படைத்து பெத்லகேமுக்குத் தமிழிலக்கியத்தில் அழியா இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். இக்குறவஞ்சி இலக்கியம் நாடகப் பாங்கான கதை அமைப்புடையது. இதை இயற்றிய சாஸ்திரியார் தஞ்சை சரபோஜி மன்னரின் அவைப் புலவராக இருந்தார்.
பெத்லகேம் குறவஞ்சியில் இறைவாழ்த்து, இயேசுவின் உலா, தேவமோகினி காதல், குறத்தி கூறல், சிங்கன் வருகை என்று 5 பகுதிகள் உள்ளன. இதன் கதையமைப்பு பின்வருமாறு:
முதலில் கட்டியங்காரனாக திருமுழுக்கு யோவான் வருகிறார். அவரே இயேசு உலா வரப்போகிறார் என்னும் செய்தியை அறிவிக்கிறார்; இயேசுவின் பெருமைகளை எடுத்தோதுகிறார். உலா வரும் இயேசுவை வரவேற்க எருசலேம் நகரே விழாக் கோலம் பூணுகிறது. நகர மாந்தர்களும் வானதூதர்களும் திருச்சபை மகளிரும் திரளாகக் கூடிவருகின்றனர். இயேசு மாட்சிமையோடு உலா வருகின்றார்.
உலா வரும் இயேசுவைப் பார்க்கும் அனைவரும் வியப்பில் ஆழ்கின்றனர். மக்கள் இலைக் கொத்துகளை அசைத்து "ஓசன்னா" என்று கூறி ஆர்ப்பரிக்கின்றனர்.
சீயோன் மகள் என்னும் தேவ மோகினி (திருச்சபையின் உருவகம்) இயேசுவைக் கண்டதும் காதல் கொள்கிறாள். அழகும் இறைபக்தியும் கருணையும் நிறைந்த அப்பெண் படுகின்ற இன்ப வேதனையை சாஸ்திரியார் சிறப்புற விவரிக்கின்றார்.
உலா வந்த இயேசுவைக் கண்டதும் நெஞ்சைப் பறிகொடுத்தத சீயோன் மகள் (திருச்சபை) அவரை நினைத்து ஏங்கித் தவிக்கின்றாள். இவ்வேளையில் (விசுவாச) குறத்தி (சிங்கி) வருகிறாள். இடுப்பில் கூடையும் சிங்கார நடையுமாக வந்த குறத்தியை அழைத்து, தலைவி குறிசொல்லக் கேட்கின்றாள். குறத்தியும் தன் நாட்டு வளத்தையும் நகர வளத்தையும் மலை வளத்தையும் எடுத்துக் கூறும் போது விவிலியச் செய்திகளையும், இயேசுவின் பெருமையையும் அவர் புரிந்த அருஞ்செயல்களையும் கிறித்தவரின் மேன்மைகளையும் கூடவே இணைத்துக் கூறுகிறாள்.
இயேசுவின் வியத்தகு பெருமைகளைக் குறத்தி கூறக் கேட்ட தலைவியை நாணம் மேற்கொள்ளவே அவள் முகம் சிவந்து விழி தாழ்க்கின்றாள். தலைவியின் கையைப் பார்த்துக் குறிசொல்லும் குறத்தி "பெத்லகேம் நாதர் (பெத்தலை நாதர் = இயேசு) உன்னை மணம் கொள்ள நாளை வருவார்; சேலை வரும்; மாலை வரும்; சிலுவை முத்திரை மோதிரமும் வரும்" என்று குறி கூறுகிறாள். தலைவியும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகின்றாள். நன்றிநிறை உள்ளத்தோடு சிங்கிக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளிக்கின்றாள்.
இதைத் தொடர்ந்து (ஞான) சிங்கன் பெத்லகேம் நாதராம் இயேசுவைப் பாடிக்கொண்டே வருகின்றான். அந்த இயேசுவிடம் ஒரு "ஞான வலை" இருக்கிறது என்றும், ஆசையெனும் வலையில் சிக்கித்தவிக்கும் மனிதரை மீட்டெடுப்பது அந்த ஞான வலையே என்றும் பாடுகின்றான். பின் அவன் சிங்கியைச் சந்திக்கின்றான். "இத்தனை காலமாய் என்னிடம் கேளாமல் எங்கே நீ சென்றனை சிங்கி?" என்று அவன் கேட்க, சிங்கி பதிலாக, "பெத்தலேகம் நகர் சீயோன் குமாரிக்குப் பத்திக்குறி சொலச் சிங்கா" என்று கூறுகின்றாள்.
கதைத் தலைவியாம் சீயோன் மகளிடமிருந்து பெற்ற அணிகளையெல்லாம் சிங்காரமாக உடலில் சாத்தியிருந்த குறத்தியிடம் சிங்கன் அவை எங்கிருந்து வந்தனவென்று வினவுகிறான். அதற்குச் சிங்கியும் நயமாகப் பதிலளிக்கின்றாள்.
பின்னர் சிங்கனும் சிங்கியும் கடவுளைப் போற்றுகின்றனர். இறுதி வாழ்த்தோடு பெத்லகேம் குறவஞ்சி நிறைவு பெறுகிறது.[3]. இக்குறவஞ்சி வழியாக வேதநாயகம் சாஸ்திரியார் கிறித்தவ சமயக் கருத்துக்களை இலக்கிய நயத்தோடும், மக்கள் பண்பாட்டோடு இயைந்த விதத்திலும் எடுத்துக் கூறியுள்ளார்.
பெத்லகேம் பற்றி மேலும் காண்க: இயேசு பிறப்புக் கோவில்
ஆதாரங்கள்
- ↑ West Bank Local Elections ( Round two)- Successful candidates by local authority, gender and No. of votes obtained, Bethlehem p. 23.
- ↑ பெத்லகேம் நகர்
- ↑ வேதநாயகம் சாஸ்திரியார் எழுதிய பெத்லகேம் குறவஞ்சி