கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள்

கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள் என்பவை, கிறிஸ்தவ சமயத்தின் நம்பிக்கையைப் பற்றி உலகளாவிய திருச்சபையின் ஆயர்கள் மற்றும் இறையியல் அறிஞர்கள் ஒன்று கூடி விவாதித்து தீர்வு காணும் நிகழ்வுகள் ஆகும். கத்தோலிக்க திருச்சபையின் கணிப்புப்படி, இதுவரை மொத்தம் 21 பொதுச்சங்கங்கள் நடைபெற்றுள்ளன.

கத்தோலிக்க திருச்சபை

தொகு

பொதுச்சங்கம் என்பது திருச்சபை வாழ்வு பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்க, உலகளாவிய திருச்சபையின் ஆயர்கள் ஒன்று கூடும் செயலாகும். கிறிஸ்தவ வரலாற்றில் நடைபெற்ற 21 திருச்சங்கங்களை, பொதுவாக கத்தோலிக்க திருச்சபை பொதுச்சங்கங்களாக ஏற்றுக் கொண்டுள்ளது. தொடக்க காலப் பொதுச்சங்கங்களைத் தவிர்த்து, கத்தோலிக்க வரலாற்றில் முக்கியமானவையாக கருதப்படுபவை இரண்டு பொதுச்சங்கங்கள். அவை, 1. திரெந்து பொதுச்சங்கம், 2. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்.

முதல் எட்டு பொதுச்சங்கங்கள்

தொகு

முதல் எட்டு பொதுச்சங்கங்களும் (325-870) உரோமைப் பேரரசின் தலைநகராக கீழைப் பகுதியில் விளங்கிய கான்ஸ்தாந்திநோபுளைச் சூழ்ந்த இடங்களில் உரோமைப் பேரரசர்களால் கூட்டப்பெற்றன. கிறிஸ்தவ நம்பிக்கை உண்மைகளை வரையறுப்பதே இப்பொதுச்சங்கங்களின் முக்கிய நோக்கமாயிருந்தது. நிசேயா நம்பிக்கை அறிக்கை தவிர மூவொரு கடவுளின் இயல்பு, கிறிஸ்துவின் மனித, இறை இயல்புகள், தூய ஆவியின் இறை இயல்பு, மரியா கடவுளின் தாயாக இருக்கிறார் போன்ற நம்பிக்கை உண்மைகள் இந்த பொதுச்சங்கங்களில்தான் கிரேக்க மெய்யியல் பின்னணியில் துல்லியமாக வரையறுக்கப்பட்டது. இந்த எட்டு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும்[1] கீழே தரப்படுகின்றன.

வரிசை பொதுச்சங்கம் ஆண்டு முக்கிய விவாதப்பொருள் - முடிவு
1 நிசேயா 1 325 கிறிஸ்துவின் இறை இயல்பு
2 கான்ஸ்தாந்திநோபுள் 1 381 தூய ஆவியின் இறை இயல்பு
3 எபேசு 431 மரியா கடவுளின் தாய்
4 கால்செதோன் 451 கிறிஸ்துவின் மனித - இறை இயல்புகள்
5 கான்ஸ்தாந்திநோபுள் 2 553 நெஸ்தோரியு கண்டனம் செய்யப்படல்
6 கான்ஸ்தாந்திநோபுள் 3 680-681 கிறிஸ்துவின் மனித - இறை இயல்புகள்
7 நிசேயா 2 797 சொரூப வணக்கம்
8 கான்ஸ்தாந்திநோபுள் 4 869-870 ஃபோசியுஸ் கண்டனம் செய்யப்படல்

அடுத்த ஏழு பொதுச்சங்கங்கள்

தொகு

அடுத்து நடைபெற்ற ஏழு பொதுச் சங்கங்களும் (1113-1312) உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்தன. கிரேக்க மொழியின் இடத்தை இலத்தீன் மொழி பிடித்துக்கொண்டது. திருச்சபையும் அரசு சமூகமும் ஒன்றோடொன்று நெருங்கிய விதத்தில் பிணைந்திருந்த காலமது. திருத்தந்தையர் இச்சங்கங்களைக் கூட்டினர். இவை பெரும்பாலும் திருச்சபையில் நிலவிய சீர்கேடுகளைத் திருத்தவும் ஒழுங்கு கொணரவும் கூட்டப்பெற்றன. இந்த ஏழு பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும்[1] கீழேத் தரப்படுகின்றன.

வரிசை பொதுச்சங்கம் ஆண்டு முக்கிய விவாதப்பொருள் - முடிவு
9 இலாத்தரன் 1 1123 திருச்சபை சீர்திருத்தம்
10 இலாத்தரன் 2 1139 பிளவு தவிர்த்தல்
11 இலாத்தரன் 3 1179 திருத்தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் நிர்ணயிக்கப்படல்
12 இலாத்தரன் 4 1215 பாஸ்கா கடன்
13 இலயன்ஸ் 1 1245 மன்னர் 2 ஆம் ஃபிரடெரிக் பதவி நீக்கம்
14 இலயன்ஸ் 2 1274 கிரேக்கர்களோடு ஒன்றிப்பு
15 வியென்னா 1312 திருச்சபை சீர்திருத்தம்

தொடர்ந்த மூன்று பொதுச்சங்கங்கள்

தொகு

தொடர்ந்து நிகழ்ந்த மூன்று பொதுச் சங்கங்கள் (1414-1517) திருச்சபையில் ஏற்பட்ட பெரும்பிளவைச் சீர்படுத்த முனைந்தன. ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பேர் தம்மையே திருத்தந்தையாகக் கருதியதால் திருச்சபையில் பெரும் பிளவு தோன்றியது. மேலும், திருச்சபையை ஒரு குடியரசு போலக் கருதிய சிலர் பொதுச் சங்கம் திருந்தந்தையைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என்று வாதாடியதால் குழப்பங்கள் ஏற்படலாயின. இத்தகைய குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் இச்சங்கங்கள் நடைபெற்றன. இந்த மூன்று பொதுச்சங்கங்களும் அவற்றின் முக்கிய விவாத-முடிவுகளும்[1] கீழே தரப்படுகின்றன.

வரிசை பொதுச்சங்கம் ஆண்டு முக்கிய விவாதப்பொருள் - முடிவு
16 கான்ஸ்தான்சு 1414-1418 மேலைப் பெரும்பிளவுக்கு முற்றுப்புள்ளி
17 பெர்ராரா-புளோரன்ஸ் 1437-1445 கீழைச்சபையினரோடு ஒன்றிப்பு
18 இலாத்தரன் 5 1512-1517 திருச்சபை சீர்திருத்தம்

திரெந்து பொதுச்சங்கம்

தொகு

16ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற திரிதெந்து பொதுச்சங்கம் (1545-1563) பல அரசியல் சிக்கல்களுக்கும் லூத்தர், கால்வின், ஸ்விங்கிலி போன்ற சீர்திருத்தவாதிகளின் தாக்குதல்களுக்குமிடையே நிகழ்ந்தது. இச்சங்கத்தின் வெவ்வேறு அமர்வுகளில் எல்லா ஆயர்களும் பங்கேற்கவில்லை. ஆனால் சங்கமோ திருச்சபை அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தது. திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்டது. சீர்திருத்தவாதிகள் விவாதத்துக்கு உட்படுத்திய கருத்துகளை, குறிப்பாக அருளடையாளங்கள், அருள், திருச்சபை ஆட்சி அமைப்பு, மீட்பு, நம்பிக்கை போன்றவற்றைச் சங்கம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. ஆயினும் சீர்திருத்தவாதிகளின் உண்மையான எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிய சங்கத்தில் அவ்வளவு முயற்சி செய்யப்படவில்லை. குறைகாணும் மனப்பான்மை மேலோங்கி காணப்பட்டது. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாத-முடிவுகளாக[1] இவற்றைக் குறிப்பிடலாம்:

வரிசை பொதுச்சங்கம் ஆண்டு முக்கிய விவாதப்பொருள் - முடிவு
19 திரெந்து 1545-1563 சீர்திருத்தச் சபையினருக்கு எதிர்ப்பு, திருச்சபை சீர்திருத்தம்

முதல் வத்திக்கான் பொதுச்சங்கம்

தொகு

திரிதெந்துப் பொதுச் சங்கம் முடிவடைந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னரே முதலாம் வத்திக்கான் பொதுச் சங்கம் கூட்டப்பட்டது. 'திருச்சபை' என்ற பொருள்பற்றி விவாதிக்க கூடிய, இச்சங்கம் திருத்தந்தையின் முதன்மை மற்றும் வழுவாவரம் என்பவற்றை வரையறுத்ததோடு நின்றுவிட்டது. முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம் ஒருசில மாதங்களே நிகழ்ந்தது. (8 டிச 1869-18 ஜூலை 1870). பின்னர் அரசியல் காரணங்களுக்காக ஒத்திப் போடப்பட்டது. அதிகாரப் பூர்வமாக அது முடிவுக்குக் கொணரப்படவில்லை. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாத-முடிவுகளாக[1] இவற்றைக் குறிப்பிடலாம்:

வரிசை பொதுச்சங்கம் ஆண்டு முக்கிய விவாதப்பொருள் - முடிவு
20 வத்திக்கான் 1 1869-1870 உரோமை ஆயரின் முதன்மை, வழுவா வரம்

2ஆம் வத்திக்கான் பொதுச்சங்கம்

தொகு

1962-1965 ஆண்டுகளில் வத்திக்கான் நகரிலுள்ள பேதுரு பேராலயத்தில் நிகழ்ந்த பொதுச்சங்கப் பேரவைக் கூட்டத்தில் உலகனைத்திலுமிருந்து வந்த கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர். இம்மாபெரும் நிகழ்ச்சி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த பொதுச்சங்கம், எந்த ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை உண்மையை வரையறுக்கவோ தப்பறைகளைக் கண்டனம் செய்யவோ கூட்டப்படவில்லை. மாறாக, பிற கிறிஸ்தவச் சபைகளோடு உறவு ஏற்படுத்தல், உலக சமயங்களோடும் எல்லா மக்களோடும் இன்றைய உலகோடும் உரையாடலில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூட்டப்பட்டது. இப்பொதுச்சங்கத்தின் செயல்திட்டம் திருச்சபையின் உள்வாழ்வு பற்றியும் உலகோடு திருச்சபைக்குள்ள உறவு பற்றியும் அமைந்தது. இந்த பொதுச்சங்கங்கத்தின் முக்கிய விவாதப்பொருளாக[1] இதைக் குறிப்பிடலாம்:

வரிசை பொதுச்சங்கம் ஆண்டு முக்கிய விவாதப்பொருள்
21 வத்திக்கான் 2 1962-1965 உலகோடு உரையாடும் திருச்சபை

1. திருவழிபாடு, 2. சமூகத் தொடர்புக் கருவிகள், 3. திருச்சபை, 4. கத்தோலிக்கக் கீழைச் சபைகள், 5. கிறிஸ்தவ ஒன்றிப்பு, 6. திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி, 7. துறவற வாழ்வைப் புதுப்பித்தல், 8. திருப்பணிப் பயிற்சி, 9. கிறிஸ்தவக் கல்வி, 10. கிறிஸ்தவமல்லாச் சமயங்ளோடு திருச்சபைக்குள்ள உறவு, 11. இறை வெளிப்பாடு, 12. பொதுநிலையினரின் திருத்தூதுப்பணி, 13. சமயச் சுதந்திரம், 14. திருச்சபையின் நற்செய்திப்பணி, 15. திருப்பணியாளர்களின் பணியும் வாழ்வும், 16. இன்றைய உலகில் திருச்சபை ஆகிய பதினாறு பொருள்கள் ஆராயப்பட்டு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் தீர்மானத் தொகுப்புகளாக செயலாக்கப்பட பதினாறு ஏடுகள் வெளியிடப்பட்டன. சங்க ஏடுகள் என்று அழைக்கப்படும் அவை, நவீன உலகத் திருச்சபைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளாக அமைந்துள்ளன.

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி, 2001 (திருத்திய நான்காம் பதிப்பு), முன்னுரை

வெளி இணைப்புகள்

தொகு