மாலத்தீவில் இந்துமதம்

மாலத்தீவில் இந்து மதம் (Hinduism in the Maldives) என்பது மாலத்தீவுக்கூட்டத்தில் வாழ்கின்ற மக்கள் தங்கள் வாழ்க்கை நடைமுறையில் பின்பற்றும் இந்து மத பழக்கவழக்கங்களைப் பற்றி விவரிக்கிறது. இந்து மதம் பொதுவாக முந்தைய வச்ராயன பௌத்ததிற்கும் அதை தொடர்ந்த இசுலாமிய மாற்றத்திற்கும் இடையில் பொருந்துகிறது. கி.பி 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைத்துள்ள தொல்பொருள் எச்சங்கள் சிவன், லட்சுமி மற்றும் அகத்திய முனிவர்[1] போன்ற இந்து தெய்வங்களை சித்தரிக்கின்றன.

டான் இயாலா மற்றும் அலிபுல்கு கதையில் டான் இயாலாவின் மரணம், மாலத்தீவின் இராமாயண வடிவம்

மாலத்தீவின் நாட்டுப்புறக் கதைகளில் வசிட்ட முனிவரைப் பற்றிய புராணக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இவரை அந்நாட்டு மக்கள் ஓர் வலிமை மிக்க மந்திராவாதியாக சித்தரித்து ஓடிடன் கலேச்சு என்ற பெயரால் அழைக்கிறார்கள்.[2]. ஓடிடன் கலேச்சுவின் மனைவி டேகி யகே என்பராவார், ஒரு தீவிரமான மனநிலையுடன் அவரது கணவரைப் போலவே வலிமை மிக்க சூனியக்காரியாக இருந்தார் எனவும் கூறப்படுகிறது. யோகினி' என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து டேகி என்ற இவர் பெயர் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.[1].

டான் இயாலா மற்றும் அலிபுல்கு

தொகு

ஆவி மற்றும் பில்லி சூனியம் போன்ற கருத்துக்கள் இல்லாத மாலத்தீவின் நாட்டுப்புறக் கதைகளில், "டான் இயாலா மற்றும் அலிபுல்கு" எனப்படும் கதை மிக முக்கியமானதாகும். இரண்டு காதலர்களைப் பற்றிய இந்த கதை இந்து சமயத்தை சார்ந்த ராமாயணத்தின் தழுவலாக உள்ளது. இரண்டிற்கும் வெளிப்படையான வேறுபாடுகள் இருந்தபோதிலும், பொதுவான தொடர்ச்சியான அமைப்பு இந்திய இதிகாசமான இராமாயணத்தில் உள்ள கதைப்பின்னல் போன்றே திருமணமான தம்பதியர், துன்மார்க்கன் மற்றும் சக்திவாய்ந்த மன்னன் அழகான கதாநாயகி கடத்தல் போன்ற நிகழ்வுகள் இக்கதையின் காட்சி அமைப்புகளாக உள்ளன. இதன் மூலமாக இவ்விரண்டிற்கும் இடையேயான தொடர்பு தெளிவாகத் தெரிகிறது. அனைத்து தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சொல்லப்படுகின்ற உள்ளூர் இராமாயணத்தில் சிறுசிறு வேறுபாடுகள் மட்டுமே இருக்கின்ற நிலையில் தெற்காசிய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மாலத்தீவில் காணப்படும் மாறுதல்கள் மிகவும் எதிர்பாராத்தாகும்.[1]

மாலத்தீவு இந்தியர்கள் மற்றும் அவர்களின் நிலை

தொகு

2000 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின்படி 9,000 இந்திய குடிமக்கள் மாலத்தீவில் வசிக்கின்றனர்.

மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற நிபுணர்கள் இந்திய புலம்பெயர்ந்தோரில் இடம்பெற்றுள்ள முக்கியமானவர்களாவர். இவர்கள் மாலத்தீவின் மனித வளங்களை வளர்க்க பெரிதும் உதவியுள்ளனர். இந்த குழுவில் பயிற்சி பெற்ற மற்றும் பயிற்சி பெறாத தொழில்நுட்ப வல்லுநர்கள், கொத்தனார்கள், தையல்காரர்கள், குழாய் செப்பனிடுபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பணியாளர்களும் உள்ளனர்.

மாலத்தீவு குடிமகனும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவனாகவே இருக்கிறான். வரலாற்று ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தென் கடற்கரை இந்தியர்கள், குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் மாலத்தீவுடன் நெருங்கிய மற்றும் வழக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் இந்த தொடர்புகள் ஒரு கூட்டு சமூக-கலாச்சார குழுவாக உருமாறவில்லை. மாலத்தீவு வாழ் மக்களின் பிரத்தியேகமான இசுலாமிய அடையாளத்தின் காரணமாக உருவான நிலையாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக எந்த மாலத்தீவர்களும் இந்துக்கள் அல்ல. மாநிலத்தின் மதம் சன்னி இசுலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மதமாற்றம் அனுமதிக்கப்படுவதில்லை. வழிபாட்டு நோக்கத்திற்காக எந்தவொரு சிலையையும் இறக்குமதி செய்வதை மாலத்தீவு சுங்க சட்டங்கள் தடைசெய்கின்றன. மாலத்தீவில் இந்துக்கள் பெரும்பாலும் தமிழ் அல்லது மலையாள வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

கலாச்சார உறவு

தொகு

இந்தி மொழி திரைப்பட பாடல்கள் மாலத்தீவில் பிரபலமாக உள்ளன. குறிப்பாக முகமது ரஃபி, முக்கேசு, லதா மங்கேசுக்கர், ஆசா போன்சுலே, பங்கச் உதாசு மற்றும் மன்கார் உதாசு ஆகியோரின் பழைய பாடல்கள் இத்தீவு மக்களால் விரும்பி கேட்கப்படுகின்றன. மிகவும் பிரபலமான மாலத்தீவு பாடல்களும் இந்தி பாடல்களை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. அல்லது இந்தி பாடல்களின் தாக்கத்தால் உருவான பாடல்களாக உள்ளன. இதேபோல், பிரபலமான உள்ளூர் நடனங்களில் வட இந்திய நடனங்கள், குறிப்பாக கதக் நடனம் பிரபலமாக உள்ளது. மாலத்தீவின் உள்ளூர் நடனம் 'போடு பெரு' என்று அழைக்கப்படுகிறது, இந்நடனம் பொதுவாக ஆண்களால் ஆடப்படுகிறது. இந்நடனத்திற்கான இசையை போடு பெரு (டிரம் போன்ற கருவி) என்ற கருவியால் இசைக்கிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு