வானிலை
இயற்கைத் தொடரின் பகுதி |
வானிலை |
---|
வானிலை (Weather) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது. வானிலை நடப்பு நிலையைக் குறிக்கிறது. இது நீண்டகால அடிப்படையிலான சராசரி வளிமண்டல நிலைமைகளைக் குறிக்கப் பயன்படும் தட்பவெப்பநிலை என்பதிலிருந்து வேறுபட்டது. வானிலைத் தோற்றப்பாடுகள் காற்று, முகில், மழை, பனி, மூடுபனி, தூசிப் புயல்கள் போன்ற பொது வானிலைத் தோற்றப்பாடுகளையும்; அரிதாக நிகழும் இயற்கை அழிவுகள், சூறாவளி, பனிப் புயல் போன்றவற்றையும் உள்ளடக்கியது.
வானிலை இடத்துக்கிடம் வேறுபாடாக அமையும் அடர்த்தி (வெப்பநிலை, ஈரலிப்பு ஆகியவை) நிலைமைகளையொட்டி அமைகின்றது. இவ்வேறுபாடுகள், குறிப்பிட்ட இடத்தில் உள்ள சூரியனுடைய கோணத்தினால் உண்டாகிறது. சூரியனுடைய கோணம் குறித்த இடத்தின் அகலக்கோட்டு (latitude) அமைவிடத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது.
ஒரு பிரதேசத்தின் வானிலையை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் காற்றழுத்தம் என்பன சில முக்கிய காரணிகளாகும். இதில் காற்றழுத்த வேறுபாடே காற்று, மழை ஆகியவை இருக்கக்கூடிய பிரதேசத்தைத் தீர்மானிக்கின்றது. புவியின் வளிமண்டலம் சிக்கலானதென்பதால் அதில் ஏற்படும் சிறிய மாற்றங்களும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். வானிலை மாற்றங்களுக்கான அனைத்து சக்தியும் சூரியனிடமிருந்தே பெறப்படுகின்றது. வானிலை புவிக்கு மட்டுமல்லாமல் வளிமண்டலம் உள்ள அனைத்து கோள்களுக்கும் பொதுவானது. உதாரணமாக வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்களிலும் சிக்கலான வானிலை நிலவுகின்றது. வியாழனில் உள்ள பெரும் சிவப்புப் புள்ளி எனப்படும் எதிர்-சூறாவளி அமைப்பானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு வானிலையமைப்பாகும்.
காரணம்
புவியின் ஒவ்வொரு இடமும் வெவ்வேறு வெப்பநிலையுடன் இருத்தலே வானிலைக்கான முக்கிய காரணமாகும். இதுவே பனிப்புயல் முதல் வெப்பவலை வரைபல்வேறு வானிலை வேறுபாடுகளை உருவாக்குகின்றது. அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த வெப்பநிலை காற்றழுத்த மற்றும் ஈரப்பதத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றது. அதிக காற்றழுத்தத்திலிருந்து குறைந்த காற்றழுத்தத்துக்கு காற்று வீசும். காற்றானது புவியின் சுழற்சியால் ஓர் வளைந்த வடிவிலேயே பயணிக்கும். தாழமுக்க நிலையும் காற்றுச்சுழற்சியும் ஒழுங்கமைப்பு ஒன்றைப் பேணி வளர்ச்சியடைந்து அது சூறாவளியாக மாற்றமடையலாம்.
புவியில் வானிலையின் தாக்கம்
பாறைகளின் அரிப்படைதலில் வானிலைக்கு பெரும்பங்குண்டு. பாறைகளுடன் மழைநீரும் அதன் அமிலத்தன்மையும் வேதியல் தாக்கமடைவதன் மூலம் பாறைகள் அரிப்படைந்து மண் உருவாகின்றது. உதாரணமாக வரண்ட வானிலை எப்போதும் நிலவும் நஸ்கா மற்றும் எகிப்து பிரதேசங்களில் உள்ள நஸ்கா கோடுகள் மற்றும் பிரமிட்டுகள் சேதமடையவில்லை. இது இயற்கை புவியியல் அம்சவியலிலும் தாக்கம் செலுத்தும்.