ஒக்டாவியோ பாஸ்
ஒக்டாவியோ பாஸ் (Octavio Paz Lozano; 31 மார்ச்சு 1914-ஏப்பிரல் 19, 1998) என்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற ஓர் இலக்கியவாதி ஆவார். இவர் கவிஞர், எழுத்தாளர், நூலாசிரியர், தூதுவர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.
இளமைக்காலம்
[தொகு]ஒக்டாவியோவின் தாத்தா ஓர் எழுத்தாளராக இருந்த காரணத்தால் அவருடைய நூலகம் இவருக்குப் பயன்பட்டது. அந் நூலகத்தில் இருந்த நூல்களை எடுத்துப் படித்ததால் ஐரோப்பிய இலக்கியங்களையும் மேக்சிகோ நாட்டு இலக்கியங்களையும் பற்றி அறிய வாய்ப்புக் கிட்டியது. பள்ளியில் சட்டக் கல்வியைப் பயின்றார். பின்னர் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
எழுத்துப்பணி
[தொகு]டி. எச். லாரன்சு எழுதிய நூல்கள் இவரைக் கவர்ந்தன. 1950 இல் 'தி லேபிரிந்த் ஆப் சாலிட்யூட்' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இது சுபானிசு மொழியில் எழுதப்பட்ட புகழ் பெற்ற நூல் ஆகும்.மெக்சிகோவின் நாகரிகம், பண்பாடு, வரலாறு, அந்நாட்டு மக்களின் உளவியல் ஆகியவற்றைப் பற்றி விளக்கமாக இந்த நூலில் எழுதினார். ஒக்டாவியோ தம் கவிதைகளை அமெரிக்கக் கவிஞரான டி எஸ் எலியட் பாணியில் எழுதினார் என்பது குறிக்கத்தக்கது. தனியாக இலக்கிய இதழ்களை நடத்தி வந்த ஒக்டாவியோ பாஸ் சனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வந்தார்.
தூதர் பணி
[தொகு]இந்தியாவுக்கான மெக்சிகோ தூதராகப் பணியாற்றினார். அச்சமயம் 1968 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மெக்சிகோ அரசு தம் இராணுவம் கொண்டு சுட்டுக் கொன்றது. எனவே மெக்சிகோ அரசின் அடக்குமுறையைக் கண்டித்து ஒக்டாவியோ தம் பதவியைத் துறந்தார். 1970 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியை ஏற்றார். நான்கு ஆண்டுகள் அப்பதவியில் இருந்து பணியாற்றினார்.
விருதுகள்
[தொகு]இவருடைய இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1990 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இது மட்டுமன்றி பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றார். பல நாடுகளுக்கும் பயணம் செய்தார்.
மேற்கோள்
[தொகு]http://www.poets.org/poetsorg/poet/octavio-paz