பிரம்மபுத்திரா ஆறு

சீனா, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் ஓடும் ஆறு

பிரம்மபுத்திரா ஆறு (Brahmaputra River) ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் 'ஸாங்-போ' என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணித்து நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பிரம்மபுத்திரா இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கும் கழிமுக நிலப்பகுதி

அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று அழைக்கப்படுகிறது. ஆற்றால் உருவாக்கப்பட்ட தீவுகளில் இது உலகில் இரண்டாவது பெரியதாகும். இதன் குறுக்கே அசாமில் 4940 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உள்ள போகிபல பாலம் 2002ல் திறக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டுக்கு வந்த9.15 கிமீ நீளமும் 12.9 மீ அகலமும் உடைய தோலா-சாதியா பாலம் அசாமையும் அருணாச்ச பிரதேசத்தையும் இணைக்கிறது, இது இந்தியாவின் நீளமான பாலம் ஆகும். அசாமிலுள்ள 2284 மீ நீளமுடைய நாரநாராயண் சேது பாலம் இரட்டை அடுக்கு பாலமாகும் கீழ் தளத்தில் தண்டவாளமும் மேல் தளத்தில் சாலையும் உள்ளது, இது 1998இல் திறக்கப்பட்டது.

இதன் சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர் [1]. மழை காலத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இவ்வாறுக்கு அதிகம். சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.

இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, திபெத்திலேயே சரி பாதிக்கும் மேல் பயணிக்கிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது.

புவியமைப்பு

தொகு

ஆற்றின் ஓட்டம்

தொகு

திபெத்

தொகு
 
திபெத்தில் பிரம்ப்புத்திரா (சாங்போ)

பிரம்புத்திரா நதி கயிலாய மலையிலிருக்கும் மானசரோவர் ஏரிக்கு கிழக்கில் உள்ள சேமாயங்டங் பனியாற்றில் (Chemayungdung Glacier) இருந்து உற்பத்தியாகிறது. இதன் நீளம் 3,848 கிமீ என்று சீன அறிவியல் கழகத்தின் செயற்கை கோள் நிழற்படத்தையும் ஆற்றை தொடர்ந்த தன் பயணம் மூலமும் லியு சோசுஅங் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக சாமி பிரவவானந்தா 1930இல் கண்டறிந்து இருந்தார்.[2]

உற்பத்தியாகும் இடத்திலிருந்து கிழக்காக இமய மலைத்தொடர் வழியாக 1,100 கிமீகளுக்கு மேல் பயணித்து பே என்ற இடத்தை கடந்ததும் வடக்கு வடகிழக்காக பயணித்து ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கி பின் தெற்காகவும் தென்மேற்காவும் ஆழமான பள்ளதாக்குகள் வழியே பயணிக்கிறது. யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு இப்பகுதிலேயே உள்ளது. இதன் இருபுறமும் உள்ள மலைகளின் உயரம் 5,000 மீ. இந்த பயணித்திலேயே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அடைகிறது.

இந்தியா

தொகு

அருணாச்சலப் பிரதேசத்தில் இது சியாங் என அழைக்கப்படுகிறது. திபெத்தில் உயரமான இடத்தில் பயணித்த ஆறு விரைவாக உயரம் இழந்து சமவெளியை அடைகிறது. அந்த சமவெளி இது டிகாங் என அழைக்கப்படுகிறது. சமவெளியில் சுமார் 35 கிமீ தூரம் பாய்ந்த பின் இதனுடன் டிபாங் ஆறு சேருகிறது பின் அசாமிற்றிகுள் நுழைவதற்கு முன் லோகித் ஆறு சேருகிறது. அதன் பின்பே இவ்வாறு பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. போடோ பழங்குடிகள் இதை தங்கள் மொழியில் பர்லங்-பதூர் என அழைக்கின்றனர். அசாமில் இவ்வாறு சில இடங்களில் 8 கிமீக்கும் மேலான அகலத்துடன் பயணிக்கிறது.

அசாமில் இவ்வாறு பெரியதாக எக்காலத்திலும் தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. அசாமில் இமயமலையில் தோன்றும் பல ஆறுகள் இதனுடன் இணைகின்றன. இவற்றில் தான்சிறி, கோப்பிலி, டிகோகு, புரி-திகிங், சியாங், சுபான்சிறி, பர்ந்தி பரலி, மனசு, சங்கோசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டிபுர்கார், லக்சிமிபுர் மாவட்டங்ளில் இவ்வாறு இரு கிளைகளாக பிரிகிறது. வடக்கு கிளை கெர்குட்டியா சூடி என்றும் தென் கிளை பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது. சுபான்சிறி வடக்கு கிளை கெர்குட்டியா சூடியுடன் இணைகிறது. கிட்டதட்ட்ட 100 கிமீ பயணம் செய்த பின் அவை மீண்டும் இணைந்து ஓரே ஆறாக செல்கிறது. அந்த இடைவெளியானது மாசுலி தீவு என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் பெரிய ஆற்றுத்தீவு ஆகும். சகுவகாத்தி அருகில் இதன் அகலம் ஒரு கிமீ, இதுவே அசாமில் இதன் குறுகிய அகலமாகும். அதனால் அங்கு சராய்காட் போர் 1676 மார்ச்சில் நிகழ்ந்தது. சராய்காடிலேயே முதல் சாலை, ரயில் தண்டவாளம் உடைய ஈரடக்கு பாலம் 1962 ஏப்பிரலில் அமைக்கப்பட்டது. . அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது.

வங்காள தேசம்

தொகு

வங்க தேசத்தில் பிரம்பபுத்திரா என்ற பெயருடன் நுழையும் இவ்வாறு இதன் நீளமான துணையாறான தீசுட்டா இதனுடன் கலந்த பின் சற்று கீழே இரண்டாக பிரிகிறது. மேற்கிலுள்ள பெரிய கிளையும் அதிக நீர் செல்வதுமான கிளைக்கு சமுனா என்று பெயர், கிழபுற சிறிய கிளைக்கு கீழ் பிரம்மபுத்திரா அல்லது பழைய பிரம்மபுத்திரா என்று பெயர் சிறிய கிளையான இது முற்காலத்தில் பெரிய கிளையாக இருந்தது. 240 கிமீ ஓடும் சமுனாவானது வங்கத்தில் பத்மா என்றழைக்கப்படும் கங்கையுடன் இணைந்து பத்மா என்ற பெயரிலேயே ஓடுகிறது.

பழைய பிரம்மபுத்திரா டாக்காவுக்கு அருகில் மேக்னா ஆற்றுடன் இணைகிறது. பத்மா ஆறு சான்டபூர் என்னுமிடத்துக்கு அருகில் மேக்னாவுடன் இணைகிறது. பத்மா இணைந்தபின் அவ்வாறு மேக்னா என்ற பெயருடனே ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

அடிப்படை கூறுகள்

தொகு
 
வானத்தில் இருந்து தெரியும் பிரம்மபுத்திரா

பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 661 334 சதுர கிமீ ஆகும். பல தற்காலிக மணல் மேடுகளை கொண்டுள்ள இது தன் போக்கை மாற்றிக்கொள்ளும் ஆற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். வங்காள தேசத்தில் சமுனா ஆறு உள்ள பகுதி இமயமலை உருவாகும் நில ஓடு மோதல் செயலாற்றும் பகுதியும் மலையை ஒட்டி உருவாகும் வங்காள படுகை தோன்றுமிடமாகும்.பல ஆராய்ச்சியாளர்கள் வங்கத்தின் பல பெரிய ஆறுகள் அமைந்துள்ள இடமே நில ஒட்டு கட்டமைப்புக்கு அடிப்படையான காரணம் என ஊகிக்கிறார்கள். உரசுமுனை தணிவதன் காரணமாக நில ஓடு கட்டமைப்பின் வலிமையற்ற பகுதிகளாக இப்போதுள்ள கங்கா-பத்மா-சமுனா ஆறுகள் ஓடும் பகுதி உள்ளதென மார்கனும் தெலன்டிர்ரேவும் 1959இல் கண்டறிந்தார்கள். 1999இல் சிச்மோன்மெர்கன் இக்கூற்றை மறத்து சமுனா ஆற்றின் அகலம் மாறுவது இந்த உரசுமுனைக்கு எதிர்வினையாக என்றும் மேற் புறத்தில் ஓடும் ஆற்றின் பகுதியில் வண்டல் அதிகம் சேருவதற்கும் உரசுமுனையே காரணமென்றும் கூறுகிறார். தன் கூற்றுக்கு ஆதாரமாக சில நிழற்படங்களை காட்டிய இவர் பாகபந்து பல்நோக்கு பாலம் ஆற்றின் கீழ் பகுதியிலுள்ள ஆற்றின் அகலமானது உரசுமுனையால் பாதிக்கப்படுகிறது என்கிறார். இமயமலையில் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாக கழிமுகத்தின் நீளம் காம்பிரியன் காலத்து கழிமுகத்தை விட சில நூறு மீட்டர்கள் அதிகமாகியுள்ளதுடன் கழிமுகத்தின் தடிமனும் பெரிதும் அதிகமாகியுள்ளது.

நீர் வெளியேற்றம்

தொகு

கங்கை(பத்மா)-பிரம்மபுத்திரா சராசரியாக வினாடிக்கு 30,770 கன மீட்டர் நீரை ( 700,000 கன அடி) கடலுக்குள் வெளியேற்றுகிறது, இது உலக அளவில் மூன்றாவது அதிக நீர் வெளியேற்றமாகும். இதில் பிரம்ம்புத்திராவின் பங்கு மட்டும் 19,800 கன மீட்டர் ஆகும். பிரம்மபுத்திரா-கங்கை 1.84 பில்லியன் டன்கள் வண்டலை ஆண்டுதோறும் கொண்டுவருகின்றன இது உலகத்திலேயே அதிகமாமகும்.[3][4]

முன்பு பிரம்மபுத்திராவின் கீழ் பகுதி சமல்பூர், மைமென்சிங் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தது. 1762 ஏப்பிரலில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் தீசுட்டா ஆறு கலந்ததிற்கு கீழ் உள்ள பகதூராபாயிண்ட் என்ற இடத்திலிருந்து தெற்கு நோக்கி சமுனாவாக பெருமளவு நீருடன் பாயத்தொடங்கியது, இதற்கு முதன்மையான காரணம் நிலநடுக்கத்தால் வடக்கே சமல்பூரிலிருந்து தெற்கே நாராயணகன்ச் வரையுள்ள மாதவ்பூர் மேட்டுநிலம் பல அடி உயர்ந்ததே ஆகும்.[5]

காலநிலை

தொகு

அதிகரிக்கும் வெப்பநிலையே மேற்புறத்திலுள்ள (தலைப்பகுதி) பிரம்மபுத்திராவின் நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள பனி உருக முதன்மையான காரணமாகும்.t.[6] ஆற்றின் நீர்வெளியேற்றம் மேற்புறத்திலுள்ள பனி உருகுவதால் கடுமையாக பாதிக்கப்படுகிறது (அதிகரிக்கிறது). பனி உருகுவதால் ஆற்றில் சேரும் வண்டல் ஆற்று நீரின் ஓட்டம் தடைபட காரணமாக உள்ளது. வெப்பத்தால் பனி உருகி அதிக நீரையும் வண்டலையும் ஆற்றில் சேர்ப்பது வெள்ளம் நில அரிப்பு போன்ற இடர்களை உருவாக்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://gradeup.co/the-theory-of-everything-brahmaputra-river-i-5e5762f8-83ea-11e6-b230-7aadc38c326b
  2. "China maps Brahmaputra source, course". Assam Tribune. 24 August 2011 இம் மூலத்தில் இருந்து 2012-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120722144718/http://www.assamtribune.com/aug2411/at096.txt. பார்த்த நாள்: 2011-11-09. 
  3. "Brahmaputra River". Encyclopædia Britannica. Archived from the original on 30 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 November 2016.
  4. The Geography of India: Sacred and Historic Places. Britannica Educational Publishing. 2010. pp. 85–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-202-4.
  5. Suess, Eduard (1904). The face of the earth: (Das antlitz der erde). Clarendon press. pp. 50–.
  6. "Change in snow cover area of Brahmaputra river basin and its sensitivity to temperature". Environmental Systems Research 4. doi:10.1186/s40068-015-0043-0. https://link.springer.com/article/10.1186%2Fs40068-015-0043-0.