மாங்கனீசு(VII) ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(VII) ஆக்சைடு
| |
வேறு பெயர்கள்
மாங்கனிக் ஆக்சைடு
டைமாங்கனீசு எப்டாக்சைடு பெர்மாங்கனிக் ஆக்சைடு பெர்மாங்கனிக் நீரிலி | |
இனங்காட்டிகள் | |
12057-92-0 | |
EC number | 235-025-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13879826 |
| |
பண்புகள் | |
Mn2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 221.87 கி/மோல் |
தோற்றம் | அடர் சிவப்பு எண்ணெய்l (அறை வெப்பநிலை.), கந்தக அமிலத்துடன் தொடர்பு இருந்தால் பச்சை |
அடர்த்தி | 2.79 கி/செ.மீ3 |
உருகுநிலை | 5.9 °C (42.6 °F; 279.0 K) |
கொதிநிலை | சூடுபடுத்தினால் வெடிக்கும் |
சிதைந்து பெர்மாங்கனிக் அமிலம் ஆகும். HMnO4 | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றை சாய்வு |
ஒருங்கிணைவு வடிவியல் |
இருநான்முகி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும், வலிமையான ஆக்சிசனேற்றி, அரிக்கும் |
ஈயூ வகைப்பாடு | O E T+ C |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மாங்கனீசு(VII) ஆக்சைடு (Manganese(VII) oxide) என்பது Mn2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.இதை மாங்கனீசு ஏழாக்சைடு, மாங்கனீசு எப்டாக்சைடு என்ற பெயர்களாலும் அழைக்கலாம். எளிதில் ஆவியாகக் கூடிய இச்சேர்மம் அதிகமான வினைத்திறனை கொண்டதாகும். வேண்டுமென்று தயாரிக்கப்பட்டதை விட இச்சேர்மம் தயாரிக்கப்பட வேண்டாமென அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான ஓர் ஆக்சிசனேற்றியாக மாங்கனீசு(VII) ஆக்சைடு சேர்மம் கருதப்படுகிறது. முதன்முதலில் 1860 இல் கண்டுபிடிக்கப்பட்டு இது விவரிக்கப்பட்டது. பெர்மாங்கனிக் அமிலத்தின் அமில நீரிலி என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது.
பண்புகள்
[தொகு]மாங்கனீசு(VII) ஆக்சைடின் படிக வடிவச் சேர்மம் அடர் பச்சை நிறம் கொண்டதாகும். நீர்ம நிலை மாங்கனீசு(VII) ஆக்சைடு எதிரொளியில் பச்சை நிறங்கொண்டும் செலுத்தப்பட்ட ஒளியில் சிவப்பு நிறமாகவும் தோன்றுகிறது[1]. கார்பன் டெட்ராகுளோரைடு கரைசலில் மாங்கனீசு(VII) ஆக்சைடு கரைகிறது. தண்ணீருடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் சிதைவடைகிறது.
கட்டமைப்பு
[தொகு]மாங்கனீசு(VII) ஆக்சைடின் கரைதல் பண்புகள் இதை முனைவுத் தன்மை இல்லாத ஒரு மூல்க்கூறு இனமாக அடையாளம் காட்டுகிறது. இதனுடைய கட்டமைப்பும் அதை உறுதி செய்கிறது. ஒரு பொதுவான உச்சியைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு சோடி நான்முகிகளால் இம்மூலக்கூறுகள் ஆக்கப்பட்டுள்ளன. உச்சியை ஆக்சிசன் அணுக்கள் ஆக்ரமித்துள்ளன. மாங்கனீசு(VII) மையங்கள் நான்முகியின் மையப்பகுதியில் இடம் பிடித்துள்ளன. O3Mn-O-MnO3 என்ற வாய்ப்பாடு இவற்றின் இணைப்பு முறையைப் பற்றி கூறுகிறது. விளிம்பிலுள்ள Mn−O பிணைப்புகளுக்கு இடையிலான தொலைவு 1.585 Å ஆகும். இரண்டு மாங்கனீசு அணுக்களிலிருந்து 1.77 Å தொலைவில் பாலம் அமைத்துள்ள ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. கட்டமைப்பின் Mn−O−Mn அணுக்களுக்கு இடையிலான பிணைப்புக் கோணம் 120.7° ஆகும்[2].
பைரோசல்பேட்டு, பைரோபாசுப்பேட்டு, டைகுரோமேட்டு போன்றவைகள் மாங்கனீசு எப்டாக்சைடின் கட்டமைப்பை ஒத்த அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. அநேகமாக முழுமையாக மிகவும் ஒத்த முக்கிய குழு இனம் Cl2O7 ஆகும். இடைநிலை தனிமங்கள் இடம்பெற்றுள்ள உலோகத் தொடரில் உள்ள தனிமங்களுடன் ஒப்பீடுகளில் கவனம் செலுத்தினால் Tc2O7 மற்றும் Mn2O7 ஆகியவை இரண்டும் கட்டமைப்பு ரீதியாக ஒத்திருக்கின்றன. ஆனால் Tc-O-Tc இனைப்புகளுக்கு இடையிலான பிணைப்புக் கோணம் 180 பாகைகளாகும். திண்மநிலை Re2O7 ஒரு மூலக்கூற்று சேர்மம் அல்ல என்றாலும் நான்முகி, எண்முகி தளங்கள் இரண்டிலும் குறுக்குப்பிணைப்பு இரேணியம் மையங்களை பெற்றிருக்கிறது [3].
வாயுநிலையில் இது மூலக்கூற்று சேர்மமாக Tc2O7 சேர்மத்தின் அதே கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது [4].
தயாரிப்பு மற்றும் வினைகள்
[தொகு]பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் அடர் கந்தக அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் அடர் பச்சை நிறத்தில் ஒரு எண்ணெயாக Mn2O7 உருவாகிறது[1]. வினையில் முதலில் பெர்மாங்கனிக்கு அமிலமே (HMnO4) உருவாகிறது.பின்னர் இவ்வமிலம் குளிர்ந்த கந்தக அமிலத்தால் நீர் நீக்கம் செய்யப்பட்டு நீரற்ற Mn2O7. உருவாகிறது.
- 2 KMnO4 + 2 H2SO4 → Mn2O7 + H2O + 2 KHSO4
வினைகள்
[தொகு]Mn2O7 கந்தக அமிலத்துடன் வினைபுரிந்து மாங்கனைல்(VII) நேர்மின் அயனியை MnO+
3 கொடுக்கிறது. இது குரோமியம் டிரையாக்சைடை ஒத்த எலக்ட்ரான் அமைப்பை கொண்டுள்ளது.
- Mn2O7 + 2 H2SO4 → 2 [MnO
3]+
[HSO
4]−
+ H2O
அறை வெப்பநிலைக்கு அருகில் Mn2O7 சிதைவடைகிறது. இதுவே 55 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்டால் வெடிப்புடன் சிதைவடைகிறது. உப்பு மாதிரியை அடித்தல் அல்லது கரிமச் சேர்மங்களுடன் தொடர்பு உண்டாதல் போன்றவையே வெடித்தல் நிகழ போதுமான தூண்டுதல்களாகும். வெடித்தலுக்குப் பின் அல்லது சிதைவுக்குப் பின் உருவாகும் விளைபொருள்கள் மாங்கனீசு டை ஆக்சைடும் ஆக்சிசன் வாயுவுமாகும் [5]. ஓசோன் வாயுவும் இவ்வினையில் உருவாகலாம். ஆல்க்காலில் தோய்க்கப்பட்ட ஒரு துண்டு காகிதத்தை ஓசோன் வாயு தன்னிச்சையாகப் பற்றவைக்கும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 H. Lux (1963). "Manganese(VII) Oxide". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 1. NY,NY: Academic Press. pp. 1459–1460.
- ↑ Simon, A.; Dronskowski, R.; Krebs, B.; Hettich, B. (1987). "The Crystal Structure of Mn2O7". Angew. Chem. Int. Ed. Engl. 26: 139–140. doi:10.1002/anie.198701391.
- ↑ Krebs, B.; Mueller, A.; Beyer, H. H. (1969). "The Crystal Structure of Rhenium(VII) Oxide". Inorganic Chemistry 8: 436–443. doi:10.1021/ic50073a006.
- ↑ Wells A.F. (1962) Structural Inorganic Chemistry 3d edition Oxford University Press
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.