உள்ளடக்கத்துக்குச் செல்

கிசாவின் பெரிய பிரமிடு

ஆள்கூறுகள்: 29°58′45.03″N 31°08′03.69″E / 29.9791750°N 31.1343583°E / 29.9791750; 31.1343583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசாவின் பெரிய பிரமிடு
பாரோ கூபு
ஆள்கூறுகள்29°58′45.03″N 31°08′03.69″E / 29.9791750°N 31.1343583°E / 29.9791750; 31.1343583
பண்டைய பெயர்கூபுவின் பிரமீடு
கட்டப்பட்டதுc. 2560–2540 BC
வகைTrue Pyramid
உயரம்146.5 மீட்டர்கள் (481 அடி), ancient
138.8 மீட்டர்கள் (455 அடி), contemporary
தளம்230.4 மீட்டர்கள் (756 அடி)

கிசாவின் பெரிய பிரமிடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு (Great Pyramid of Giza) நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிடுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது பண்டைய எகிப்தை ஆண்ட 4-ஆவது வம்சத்தின் பாரோ கூபுவின் சமாதியாகும். இது கிமு 2560 ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது[1]

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் அமைந்த பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், எரிமலைப்பாறை, கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிடுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) )

வரலாறும் விளக்கமும்

[தொகு]
கிசாவின் பெரிய பிரமிட்
கிசாவின் பெரிய பிரமிட்
19 ஆம் நூற்றாண்டு stereopticon அட்டைப் புகைப்படம்

இது 4வது வம்ச எகிப்திய பார்வோன் எனப்படும் மன்னர் கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கூபுவின் தலைமைப் பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமிடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடின் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படி இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 தொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிராமிட் ஹிம்ஹோடப் என்பவரால் உருவாக்கப்பட்டது.இவர் எல்லா கல்வி துறைகளிலும் சிறந்து விளங்கினார்.அரசர்களுக்கு ஆலோசகராகவும் பணிப்புரிந்துள்ளார்.

கட்டுமான பொருள்கள்

[தொகு]

கிசா பிரமிடு 2.3 மில்லியன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புக்களை இறுக்கி அவற்றின் மீது நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகின்றன. இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன.இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகள் மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரனைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன.

வார்ப்பு கற்கள்

[தொகு]
வார்ப்புக்கல் ஒன்று

இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன. வார்ப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய, தட்டையான மேற்பரப்பைடைய கற்கள் ஆகும்.இவை உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்புக் கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்புக் கல்லானது பிரமிடுக்குத் தேவையான வடிவத்தைக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உட்பக்கமாக அமைக்கப்பெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன.வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவிட்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன.

உட்புற அமைப்பு

[தொகு]
பிரமிடின் உட்புற அமைப்பை காட்டும் படம். இதில் உட்புற கோடுகள் அதன் தற்போதைய அமைப்பையும்,வெளிப்புற கோடுகள் அதன் உண்மை நிலையையும் காட்டுகின்றன

பெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23"" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது. இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது. மேலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவே அரசனின் உண்மையான புதைகுழியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிரமிடின் நுழைவுவாயில்

நுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது. கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது. ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது. மேலும் இது இறங்கு பாதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது. அதிலிருந்து இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது.

இராணியின் அறை

[தொகு]

இராணியின் அறையானது மிகச்சரியாக பிரமிடின் கிழக்கு மற்றும் வடக்கு முகங்களில் நடுவில் உள்ளது.இது 5.23 மீட்டர் ( 17.2 அடி ) நீளம் மற்றும் 5.75 மீட்டர் ( 18.9 அடி ) அகலத்துடன் அதிகபட்சம் 6.23 மீட்டர் உயரத்துடன் ஒரு முக்கோண வடிவ கூரையை கொண்டுள்ளது[2].

இராஜாவின் அறை

[தொகு]

இராஜாவின் அறையானது கிழக்கு மேற்காக 5.234 மீட்டர் (17.17 அடி) நீளமும் வடக்கு தெற்காக 10.47 மீட்டர் ( 34.4 அடி ) அகலமும் 5,974 மீட்டர் (19.60 அடி) உயரமுடைய ஒரு தட்டையான கூரை கொண்ட அறையாகும்.தரையில் இருந்து 0.91 மீ (3.0 அடி) உயரத்தில் வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் இரண்டு குறுகிய துளைகளை கொண்டுள்ளது.எனினும் இதன் பயன்கள் தெளிவாக தெரியவில்லை. இந்த அறையானது முழுவதும் கருங்களால் ஆன 400 டன் எடை கொண்ட 9 பாளங்களால் ஆனது.

நவீன நுழைவு வாயில்

[தொகு]

இன்று சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நுழைவு வாயிலானது கி.பி.820 ல் கலிப்-அல்-மாமுமின் வேலையாட்களால் தோண்டப்பட்ட திருடர்கள் ' சுரங்கமாகும்.இந்த சுரங்கப்பாதையானது ஏறு பாதையை அடையும் வரை சுமார் 27 மீட்டர் ( 89 அடி ) தூரம் சென்று இடபுறம் திரும்புகிறது.ஏனெனில் அப்பகுதியின் கற்களை அகற்றமுடியாததால் அதை சுற்றியுள்ள மென்மையான சுண்ணாம்பு கற்களை சுற்றி சென்று ஏறும் பாதையை அடைகின்றது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Great Pyramid of Giza
  2. ராணி (2024-10-22). "பல மர்மங்களை தாங்கி நிற்கும் உலக அதிசயம் "கீசா பிரமிடு"!". www.ranionline.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-25.

வெளி இணைப்புகள்

[தொகு]


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்