டெக்லா லோரோப்
டெக்லா லோரோப் (Tegla Loroupe பிறப்பு 9 மே 1973 குத்தோம்வோன்னி, கென்யா) என்பவர் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனை, அமைதி,பெண்விடுதலை, பெண்கல்வி ஆகியவற்றுக்குப் போராடுபவர்.
டெக்லா லோரோப் 20,25,30 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் சாதனை படைத்தவர். இவர் உலக மகளிர் அரை மாரத்தான் ( World Half-Marathon champion) போட்டிகளில் மூன்று முறை வென்றுள்ளார். நியூயார் நகர மாரத்தன் போட்டியில் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்னும் பெருமைக்கு உரியவர்.
வாழ்க்கை
[தொகு]டெக்லாவின் அப்பாவுக்கு நான்கு மனைவிகள். 24 குழந்தைகள். ஆடு, மாடு மேய்ப்பது, தண்ணீர் எடுத்து வருவது, உடன் பிறந்தவர்களைக் கவனித்துக்கொள்வதுதான் ஆறு வயது வரை டெக்லாவின் வேலையாக இருந்தது. தன் சகோதரர்கள் பள்ளிக்குச் செல்லும்போது, தான் ஏன் பள்ளிக்குச் செல்லக் கூடாது கேட்ட டெக்லா பள்ளிக்குச் செல்ல விரும்பினார்.
பெண்ணடிமைத்தனத்தில் ஊறிய அவரது தந்தையும், உறவினர்களும் பெண்கள் படிக்கக் கூடாது என்றார்கள். ஒருவழியாகப் படிக்க சம்மதம் கிடைத்தது. 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு அதிகாலை ஒரே ஓட்டமாக ஓடிவிடுவார். தன்னோடு இன்னும் மூன்று பெண்களையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார் டெக்லா.
ஓட்டம்
[தொகு]டெக்லா பள்ளிக்குச் செல்லவும் வரவும் தினமும் 10 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடந்ததால், சிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனையாக உருவானார். பள்ளியிலும் தன்னைவிடப் பெரிய மாணவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டார். பள்ளியில் டெக்லாவின் திறமையைக் கண்டு, கென்ய அதெலெடிக்ஸ் ஃபெடரேஷனில் சேர்த்துப் பயிற்சியளிக்க விரும்பினர். ஆனால் மெல்லிய உடலும் சிறிய உருவமும் கொண்ட டெக்லா மீது அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை.
1988-ம் ஆண்டு க்ராஸ் கன்ட்ரி ஓட்டப் பந்தயத்தில் வெற்றுக் கால்களுடன் ஓடி, வெற்றி பெற்றார். தொடர்ந்து பல போட்டிகளில் பரிசு பெற்றார். அதற்குப் பிறகு அத்லெடிக் ஃபெடரேஷன் அவருக்குப் பயிற்சியளிக்க முன்வந்தது. 1989-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் கால்களில் காலணிகளை (ஷு) அணிந்தார் டெக்லா.
உலக மாரத்தான் போட்டியில்
[தொகு]1994 ஆம் ஆண்டு டெக்லாவின் முதல் முறையாக வெளி நாட்டுப் பயணம் மேற்கொண்டார். நியூயார்க்கில் நடந்த உலக மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். உலகின் முக்கியமான ஓட்டப் பந்தய வீரர்கள் போட்டிக்காக வந்திருந்தனர். புதிய நாடோ, போட்டியாளர்களோ டெக்லாவைத் தயங்கச் செய்யவில்லை.
போட்டி ஆரம்பமானது. நோஞ்சானாகக் காட்சியளித்த டெக்லா வெற்றி பெறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தங்கப் பதக்கம் பெற்றுச் சாதனை படைத்தார் டெக்லா. மாரத்தானில் உலக அளவில் பட்டம் வென்ற முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற சிறப்பும் டெக்லாவுக்குக் கிடைத்தது. சர்வதேச அளவில் ஊடகங்களின் வெளிச்சம் டெக்லா மீது படிந்தது.
நாடு திரும்பியபோது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது கிராமத்தினர் கால்நடைகளைப் பரிசாக வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து உலகப் போட்டிகளில் பங்கேற்று, 3 முறை அரை மாரத்தான் சாம்பியன் பட்டங்களையும் 2 முறை உலக மாரத்தான் பட்டங்களையும் வென்று புதிய சாதனையைப் படைத்தார். 20, 25, 30 கிலோமீட்டர் தூரங்களில் ஏற்படுத்திய புதிய உலக சாதனைகள் டெக்லாவிடம் உள்ளன.
தளராத தன்னம்பிக்கை
[தொகு]2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக் போட்டியில் மாரத்தானிலும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் கலந்துகொண்டார் டெக்லா. ஆனால் போட்டி ஆரம்பமாவதற்கு முதல் நாள் இரவு கெட்டுப்போன உணவால் (ஃபுட் பாய்சனால்) அவர் உடல்நிலை மோசமடைந்தது.
இருந்தும் அவர் பின்வாங்கவில்லை. மாரத்தானில் 13 ஆவது இடத்தையும் 10 ஆயிரம் மீட்டரில் 5-வது இடத்தையும் பெற்று, எல்லோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார்.
டெக்லா அகதெமி
[தொகு]விளையாட்டில் கொடிகட்டிப் பறந்தபோதே, கென்யாவில் பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஏழை எளிய குழந்தைகள் படிப்பதற்காக டெக்லா அகதெமி என்ற பெயரில் அகதெமி ஆரம்பித்து நடத்தி வந்தார். யூனிசெஃப் தூதராகவும் செயலாற்றினார்.
டெக்லா அமைதி ஃபவுண்டேஷன்
[தொகு]டெக்லா அமைதி ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அமைதியை உருவாக்க கென்யா, உகாண்டா நாடுகளின் அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.
நிலம்,கால்நடைகள், தண்ணீர் தொடர்பான சண்டைகள் ஆப்ரிக்க மக்களுக்குள் அடிக்கடி நிகழும். இதில் உயிரிழப்புகளும் ஏற்படும். இதனால் நாட்டில் அமைதி இன்மையும்,வறுமையும் மிகுந்திருந்தது. எப்போதும் கைகளில் துப்பாக்கிகளுடன் அலைந்துகொண்டிருப்பார்கள்.
இப்படிபட்ட குற்றவாளிகளை மன்னித்து, திருந்தி வாழச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் எனபதற்காக டெக்லா அமைதி ஃபவுண்டேஷன் நிறுவி அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறார்.