திருகை
திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது.[1][2][3]
திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம். இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும்.
கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும்.
திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள். தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New aspects of rotary querns in Scotland". Proc Soc Antiq Scot 113: 106. 2008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0081-1564.
- ↑ "Explore/Highlights: Quern stone for making flour". London: The British Museum. Archived from the original on April 21, 2009.
- ↑ "New aspects of rotary querns in Scotland". Proceedings of the Society of Antiquaries of Scotland 138: 106. 2008. பன்னாட்டுத் தர தொடர் எண்:0081-1564.