உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் பயஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித முதலாம் பயஸ்
Saint Pius I
10ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்கிபி சுமார் 140
ஆட்சி முடிவுகிபி சுமார் 154
முன்னிருந்தவர்புனித ஹைஜீனஸ்
பின்வந்தவர்அனிசேட்டஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்பயஸ்
பிறப்புகிபி முதல் நூற்றாண்டின் இறுதிப் பகுதி
ஆக்குயிலேயா, இத்தாலியா
இறப்புகிபி சுமார் 154
உரோமை, உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாசூலை 11
பயஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை புனித முதலாம் பயஸ் (Pope Saint Pius I) என்பவர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் பணிபுரிந்தவர் ஆவார். வத்திக்கான் நகரிலிருந்து வெளியாகின்ற "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" (Annuario Pontificio) என்னும் ஏட்டின்படி, இவர் கிபி 142 அல்லது 146இலிருந்து 157 அல்லது 161 வரை கத்தோலிக்க திருச்சபையை ஆட்சிசெய்தார்.[1] ஒருசிலர் முதலாம் பயஸ் 140-154 காலகட்டத்தில் திருத்தந்தையாகப் பணிசெய்தார் என்பர்.[2]

  • பயஸ் என்னும் பெயர் (இலத்தீன்: Pius; ஆங்கில மொழி: Pius [பொருள்: Pious]) இலத்தீன் மொழியில் "பக்தி நிறைந்தவர்" என்று பொருள்படும். எனவே தமிழில் "பத்திநாதர்" என்னும் பெயரும் வழக்கில் உண்டு.

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

திருத்தந்தை முதலாம் பயஸ் வட இத்தாலியாவில் ஆக்குயிலேயா என்னும் நகரில் கிபி முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார் எனத் தெரிகிறது.[3] அவர்தம் தந்தை ஆக்குயிலேயாவைச் சார்ந்த ருஃபீனஸ் (Rufinus) என்று "திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு" கூறுகிறது.[4]

ஹெர்மஸ் என்னும் பெயர் கொண்ட பண்டைக்காலக் கிறித்தவ எழுத்தாளர் முதலாம் பயசின் சகோதரர் என்று முராத்தோரி சுவடியும் (2ஆம் நூற்றாண்டு),[5] "லிபேரியுசின் அட்டவணை" (Liberian Catalogue) என்னும் நூலும்[6] கூறுகின்றன. ஹெர்மசும் பயசும் விடுதலை பெற்ற அடிமைகளாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

திருத்தந்தைப் பணி

[தொகு]

உரோமைப் பேரரசர்கள் அந்தோனீனஸ் பீயுஸ் மற்றும் மார்க்கஸ் அவுரேலியஸ் என்பவர்கள் காலத்தில் திருத்தந்தை முதலாம் பயஸ் உரோமைத் திருச்சபையின் தலைவராக விளங்கினார் (கிபி இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி).[7] [[புனித பேதுரு|புனித பேதுருவின் வழியில் ஒன்பதாம் திருத்தந்தையாக அவர் ஆட்சி செய்தார்.[2] இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஒவ்வொரு ஆண்டும் ஞாயிற்றுக் கிழமையிலேயே கொண்டாடப்படும் என்று அவர் ஒழுங்குபடுத்தினார். "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் ஏட்டினை வெளியிடப் பணித்தவர் இவரே[8] என்றொரு கருத்து இருப்பினும், உண்மையில் அந்நூலின் தொகுப்புப் பணி 6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன் ஆரம்பிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.[9] உரோமை நகரில் அமைந்துள்ள மிகப் பழமையான கோவில்களுள் ஒன்றாகிய புனித புதேன்சியானா என்னும் வழிபாட்டு இடத்தைக் கட்டியவர் இவரே என்று கூறப்படுகிறது.

ஞானக்கொள்கைக்கு எதிர்ப்பு

[தொகு]

தம் ஆட்சிக்காலத்தில் திருத்தந்தை முதலாம் பயஸ் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. அவர் காலத்தில் புனித ஜஸ்டின் என்னும் கிறித்தவ அறிஞர் உரோமையில் கிறித்தவ போதனையை அறிவித்தார். அப்போது "ஞானக்கொள்கை" (Gnosticism) என்னும் தப்பறைக் கொள்கையை வாலன்டைன், சேர்தோன், மார்சியோன் ஆகியோர் உரோமையில் பரப்பிவந்தார்கள். இப்பின்னணியில் பார்க்கும்போது, கிபி 2ஆம் நூற்றாண்டில் உரோமை ஆட்சிப் பீடம் கிறித்தவ திருச்சபை அமைப்பில் முதலிடம் பெற்றிருந்தது தெரிகிறது.[8] முதலாம் பயஸ் ஞானக்கொள்கையை எதிர்த்ததோடு, மார்சியோன் என்பவரைச் சபைநீக்கம் செய்தார்.[10]

இறப்பு

[தொகு]

முதலாம் பயஸ் மறைச்சாட்சியாக உயிர்நீத்திருக்கலாம் என்றொரு கருத்து உளது. ஆயினும் 1969இல் நிகழ்ந்த ஆய்வின்படி, முதலாம் பயஸ் கிறித்தவ சமயத்தின் பொருட்டு கொல்லப்பட்டார் என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை.[11] மேலும், "உரோமை மறைச்சாட்சிகள் நூல்" (Roman Martyrology) என்னும் ஏட்டில் அவர் மறைச்சாட்சி என்று குறிப்பிடப்படவில்லை.[12]

திருவிழா

[தொகு]

புனித முதலாம் பயசின் திருவிழா சூலை மாதம் 11ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. "உரோமன் கத்தோலிக்க புனிதர்கள் நாள்காட்டி" (Roman Catholic Calendar of Saints) என்னும் ஏட்டில் அவர் திருவிழா குறிக்கப்படவில்லை. எனினும், பொது ஒழுங்குப்படி, அவர் திருவிழா "நினைவு" என்னும் வகையில் கொண்டாடப்படலாம்.[13]

வெளி இணைப்புகள்

[தொகு]


ஆதாரங்கள்

[தொகு]
  1. "Annuario Pontificio" (Libreria Editrice Vaticana, 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-209-8021-4), P. 8*
  2. 2.0 2.1 Catholic Encyclopedia: Pope St. Pius I
  3. "Lives of the Saints, For Every Day of the Year," edited by Rev. Hugo Hoever, S.O.Cist.,Ph.D., New York: Catholic Book Publishing Co., 1955, p. 263
  4. Ed. Duchesne, I, 132.
  5. Ed. Preuschen, "Analecta, 1," Tubingen, 1910.
  6. Ed. Duchesne, "Liber Pontificalis, I, 5."
  7. "Lives of the Saints, For Every Day of the Year," p.263
  8. 8.0 8.1 "Lives of the Saints, For Every Day of the Year," p. 263
  9. "Dictionnaire historique de la papauté", Philippe Levillain, Fayard 1994, p. 1042–1043"
  10. "Dictionary of Saints" (First Image Books Edition, April 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-51520-0), p. 505
  11. "Calendarium Romanum" (Libreria Editrice Vaticana, 1969), p. 129
  12. "Martyrologium Romanum" (Libreria Editrice Vaticana, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-209-7210-7)
  13. General Instruction of the Roman Missal பரணிடப்பட்டது 2008-07-20 at the வந்தவழி இயந்திரம், 355 c
  •  இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது:  "Pope St. Pius I". Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன். 
  • "Lives of the Saints, For Every Day of the Year," edited by Rev. Hugo Hoever, S.O.Cist., Ph.D., New York: Catholic Book Publishing Co., 1955, pp 511
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

140–154
பின்னர்