உள்ளடக்கத்துக்குச் செல்

முலை நீக்க அறுவை சிகிச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முலை நீக்க அறுவை சிகிச்சை
இடையீடு
முலைநீக்கப்பட்ட நோயாளி
ICD-9-CM85.4
MeSHD008408
MedlinePlus002919

முலை நீக்க அறுவை சிகிச்சை (கிரேக்கம்: மாசுடெக்டமி, Mastectomy, பொருள்: முலை + நீக்கம்) முலைகளை அறுவை மூலம் நீக்குகின்ற சிகிச்சை ஆகும். இது ஒரு பெண் அல்லது ஆணின் ஒரு அல்லது இரு முலைகளையோ அவற்றின் பகுதியையோ அல்லது முழுமையாகவோ நீக்குவதைக் குறிக்கும். இந்த அறுவைச் சிகிச்சை பொதுவாக மார்பகப் புற்றுநோய் சிகிச்சையின் அங்கமாக உள்ளது; சில நேரங்களில் புற்றுநோய் வருவதற்கு கூடிய தீவாய்ப்பு உள்ளதாக கருதப்படும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருமுன் சிகிச்சையாக இந்த அறுவை செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக சில நோயாளிகள், கட்டி நீக்க அறுவை சிகிச்சை எனப்படும் அறுவை மூலம் புற்றுக்கட்டி உள்ள முலைத் திசுக்களையும் அதைச் சுற்றியுள்ள சிறிதளவு நல்ல திசுக்களையும் மட்டுமே நீக்கிக் கொள்வர். இவை இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான, புற்றுள்ள பகுதியை மட்டுமே தாக்கும், உள்ளிட சிகிச்சைகளாக கருதப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக உடலியக்கவியல் சார்ந்த வேதிச்சிகிச்சை, இயக்கநீர் சீர்சிகிச்சை, அல்லது நோயெதிர்ப்பியல் சிக்கிச்சை முறைகள் உள்ளன. முலை நீக்கம் அல்லது கட்டி நீக்கத்துடன் துணை சிகிச்சையாக கதிரியக்க மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

ஆய்வுகளின்படி மார்பகப் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை எடுக்கும் முன்னரே மிகச்சிறு புற்றுநோய் இடமாறல் நேர்ந்துள்ள நோயாளிகளுக்கு முலை நீக்கமோ கட்டி நீக்கமோ பின்னாளில் இரண்டாம் நிலை புற்றுநோய்ப் பரவலைத் தடுக்க இயலாது எனக் கண்டறியப்பட்டுள்ளது.