உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சனவரி 28, 2024

சிரியா, ஈரான், ஈராக், லிபியா, லெபானான், சூடான், சோமாலியா ஆகிய ஏழு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 90 நாட்கள் அமெரிக்கா வர தடை விதித்து அமெரிக்க அதிபர் தொனல்ட் திரம்பு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இத் தடை உடனடியாக நடைமுறைக்கு வந்தது.


சிரியாவில் இருந்து வருபவர்களை அடுத்த உத்தரவு வரும் வரை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். முன்பே நுழைவு அனுமதி பெற்றவர்களும் அமெரிக்காவை விட்டு வணிக காரணங்களுக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ வெளியே சென்றிந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா வர முடியாது.


நிரந்தர வசிப்பிடம் அனுமதி பெற்றவர்களும் வெளியே சென்றிருந்தால் மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இத்தடையால் வானூர்தி நிலையங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இத்தடையை கூகுள், மைக்ரோசாப்ட், பேசுபுக் போன்ற பல நிறுவனங்கள் எதிர்க்கின்றன. இத்தடையால் நியூசிலாந்து சென்ற தன் பணியாளரை உடனடியாக திரும்பி வருமாறு கூகுள் உத்தரவிட்டுள்ளது.


இச்சட்டம் மூலம் வரும் 120 நாட்களுக்கு எந்த அகதிகளையும் ஐக்கிய அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது. குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழும் வரை சிரியாவில் இருந்து வரும் அகதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். 2017ஆம் ஆண்டு 25,000 அகதிகளை மட்டும் அமெரிக்கா ஏற்கும். மத காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டவர்களின் அகதி மனுக்கள் முதலில் கவனிக்கப்படும். ஆனால் அம்மதம் அந்நாட்டில் சிறுபான்மை மதமாக இருக்க வேண்டும்.


இத்தடையால் கோபமடைந்த ஈரான் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்துள்ளது.

மூலம்

[தொகு]