உள்ளடக்கத்துக்குச் செல்

சிவ வடிவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவ வடிவங்கள் என்பவை சைவக் கடவுளான சிவபெருமானின் வடிவங்களாக ஆகமங்களும், நூல்களும் கூறுபவனவாகும். இவ்வடிவங்களில் சிவபெருமான் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு அருளுகின்றார். சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி சிவபெருமான் அவதாரம் எடுப்பதில்லை. பக்தர்களுக்கு அருளும் பொருட்டு அவர் வடிவம் மட்டுமே எடுக்கிறார்.

வடிவ வகைகள்

[தொகு]

இச்சிவ வடிவங்களை உரு, அரு, அருஉரு என மூன்றாக வகைப்படுத்துகின்றனர்.[1] இதனை அருவம், உருவம், அருவுருவம் என்றும், பிரவிருத்தர், சத்தர், பரம்பொருள்[2] என்றும் சகளம், நிட்களம், சகள நிட்களம் எனவும் பலவாறாக சைவர்கள் அழைக்கின்றனர்.

உருவ நிலை

[தொகு]

சகளத் திருமேனி, சகளம் எனப் பலவாறு அறியப்படும் உருவ நிலையானது பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசன் எனும் நான்கு தெய்வ வடிவங்களைக் குறிப்பதாகும். தலை, உடல், கை, கால் என உறுப்புகள் அமைந்த சிவ வடிவங்கள் இவ்வகையில் அடங்கும்.

அருவ நிலை

[தொகு]

நிட்களம், நிட்களத் திருமேனி என்று அறியப்படும் அருவ நிலையானது விந்து(சத்தி), நாதம்(சிவம்), பரவிந்து(பராசக்தி),பரநாதம் (பரசிவம்)எனும் நான்கினைக் குறிப்பதாகும். உறுப்புகள் எதுவும் இல்லாத சிவலிங்கம் அருவம் மற்றும் உருவம் என்ற இரு நிலைக்கும் அடங்கும்.

அருவுருவ நிலை

[தொகு]

சகளம், சகளத் திருமேனி என்று அறியப்படும் அருவுருவ நிலையானது, (சதாசிவம்) லிங்க வடிவமாக இருக்கும்.இது வரையறுக்கப்படாத உருவம் அது போல் தெளிவுபடுத்த இயலாததால் அருவம் என வழங்கப்படும்.

நவந்தருபேதம்

[தொகு]

உருவ நிலையில் நான்கு, அருவ நிலையில் நான்கு மற்றும் அருவுருவ நிலையில் ஒன்று என ஒன்பதும் நவந்தரும் பேதமாகும். இவ்வுருவங்கள் உயிர்களின் பிறப்பினை ஒழிக்க சிவபெருமான் எடுத்தவையாகும். இதனை "நவந்தருபேதம் ஏக நாதனே நடிப்பன்" என சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறார். [3]

பல்வேறு உருவ நிலைகள்

[தொகு]

நவந்தருபேதத்தில் சிவபெருமானின் உருவ நிலை பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன் என நான்கென குறிப்பிட்டலும், நூல்கள் பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன. பஞ்சகுண மூர்த்திகள், பதினாறு வடிவங்கள், பதினெட்டு வடிவங்கள், மகேசுவர வடிவங்கள், அட்டாட்ட மூர்த்திகள் என பல்வேறு வகைப்பாடுகளும், எண்ணற்ற சிவவடிவங்களும் உள்ளன.

ஐவகை உருவம்

[தொகு]

மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சத்தியோசாதம், வாமதேவம், தட்புருசம், அகோரரூபம், ஈசன் என ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது.

பஞ்சகுண சிவ மூர்த்திகள்

[தொகு]

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை பஞ்சகுண சிவமூர்த்திகள் என்கிறார்கள் சைவர்கள்.

மகேசுவர வடிவங்கள்

[தொகு]

சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

  • ஈசானம் - சோமாசுகந்தர், நடராசர், இரிடபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
  • தற்புருசம் - பிட்சாடனர், காமசங்காரர், சலந்தராகரர், கால சங்காரர், திரிபுராந்தகர்
  • அகோரம் - கசசங்காரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, நீலகண்டர், கிராதர்
  • வாமதேவம் - கங்காளர், கசாரி, ஏகபாதர், சக்ரதானர், சண்டேசர்
  • சத்யோசாதம் - இலிங்கோத்பவர், சுகானர், அர்த்தநாரீசுவரர், அரியர்த்த மூர்த்தி, உமா மகேசுவரர்

64 சிவவடிவங்கள்

[தொகு]

அட்டாட்ட விக்கிரக லீலை எனும் கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களும், அவ்வடிவங்களின் மூலம் அடியார்களுக்கு சிவபெருமான் அருளியமையும் குறிப்பிடப்பட்டுள்ளன.உலக வரலாற்றில் முதல் முறையாக பாம்பன் சுவாமிகள் அருளிய அட்டாட்ட விக்கிரக லீலை எனும் பதிகம் செய்துள்ளார் இன்னும் பல சிவனடியர்களுக்கே இந்த விவரம் தெரியாமல் இருப்பது வியப்பே எனினும் பம்பனடியார்களால் அந்த பாடலை ஒரு மகா மந்திரமாக போற்றப்படுகிறது, ஈக்காடு இரத்தினவேலு முதலியாரின் சிவபராக்கிரமம் எனும் தமிழ் நூலிலும் இந்த அறுபத்து நான்கு வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.[4]

பிற வடிவங்கள்

[தொகு]

64 சிவ வடிவங்கள் தவிர்த்து எண்ணற்ற சிவவடிவங்களை புராணங்கள் கூறுகின்றன. சைவ சமயக் கலைக் களஞ்சியம் கசாரி, கசமுக அனுக்கிரக மூர்த்தி, இராவண அனுக்கிரக மூர்த்தி, அரிவிரிஞ்சதாரணர், ஏகதசருத்திரர், முயலகவத மூர்த்தி, சர்வ சங்காரர், யக்ஞேசுவரர், உக்கிரர் ஆகியவற்றை பட்டியலிடுகிறது.

மானிட வடிவங்கள்

[தொகு]

திருவிளையாடற் புராணம், பெரிய புராணம் ஆகியவற்றில் சிவபெருமான் எடுத்த புலவர், வேடுவர், சித்தர் மற்றும் குதிரை சேவகர் என பல்வேறு மானிட வடிவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • எல்லாம் வல்ல சித்தர்

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஏகத்து உருவும் அருவும் அருவுருவுமாக வருவ வடிவம் பலவாய் - குமரகுருபர்
  2. "நீக்கமற நிறைந்த சிவன்". Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02.
  3. http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s06.jsp?id=2061
  4. அ்ஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் - இரா இராமகிருட்டிணன் பக்கம் 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_வடிவங்கள்&oldid=3960549" இலிருந்து மீள்விக்கப்பட்டது