நிக்கோலோ மாக்கியவெல்லி
நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி | |
---|---|
புளோரன்சு பொது ஊழியருக்குரிய உடையுடன் மாக்கியவெல்லி. | |
பிறப்பு | புளோரன்சு, இத்தாலி | 3 மே 1469
இறப்பு | சூன் 21, 1527 புளோரன்சு, இத்தாலி | (அகவை 58)
காலம் | மறுமலர்ச்சிக்கால மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | மறுமலர்ச்சி மெய்யியல், உண்மையியம், மரபுக் குடியரசுவாதம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் தத்துவம், படைத்துறைக் கோட்பாடு, வரலாறு |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
கையொப்பம் |
நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli - மே 3, 1469 – சூன் 21, 1527) ஒரு இத்தாலிய இராசதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். மக்கியவெல்லி இத்தாலிய மறுமலர்ச்சியின் முக்கியமான ஒருவரும், புளோரன்சு குடியரசின் ஊழியருமாக இருந்தார். 1498 ஆம் ஆண்டில் சவனரோலா வெளியேற்றப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளானபோது, பேரவை கூடி மாக்கியவெல்லியை புளோரன்சுக் குடியரசின் இரண்டாம் காப்பகத்தின் (Chancery) செயலராகத் தெரிவு செய்தது.
இளவரசன் (The Prince) என்னும் ஒரு சிறிய ஆக்கத்துக்காகவே இவர் கூடிய பெயர் பெற்றார். இது சில வேளைகளில் உண்மையிய அரசியல் கோட்பாடு எனக் குறிப்பிடப்படுவது உண்டு. இந்த ஆக்கமும், விரிவான இன்னொரு ஆக்கமான லெவி பற்றிய சொற்பொழிவுகள் (Discourses on Livy) மற்றும் புளோரன்சின் வரலாறு (History of Florence) என்னும் ஆக்கமும் அவர் இறந்த பின்னர் 1530களிலேயே வெளியிடப்பட்டன.
வாழ்கை வரலாறு
[தொகு]மாக்கியவெல்லி 1469-ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதியன்று பிளாரன்ஸ் நகரிலே பிறந்தார். இவர் பிறந்தபோது பிளாரன்ஸ், குடியாட்சி நடைபெற்று வந்த ஒரு நகர ராஜ்யமாக விளங்கியது. மாக்கியவெல்லியின் முழுப்பெயர் நிக்கோலோ மாக்கியவெல்லி என்பதாகும். இவரின் தந்தையின் பெயர் பெர்னார்டோ மாக்கியவெல்லி. நிக்கோலோ மாக்கியவெல்லி தன் இளமைப் பருவத்தை எப்படிக் கழித்தார் என்பது தெரியவில்லை. எங்கு படித்தார், எப்படிப்பட்ட கல்வி பெற்றார் என்ற விவரமெல்லாம் தெரியவில்லை. மாக்கியவெல்லியின் மனைவி மாதியெட்டாகோர்சினி என்பவராவார். மாக்கியவெல்லிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்திருக்கிறார்கள்.
மாக்கியவெல்லி 1494 -ஆம் ஆண்டு தன் இருபத்தைந்தாவது வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டார். பொது வாழ்வில் புகுந்த நான்கே ஆண்டுகளில் இவர் குடியரசு அரசாங்கத்தின் செயலாளர் ஆகவும், இரண்டாவது ஆலோசனைத் தலைவன் ஆகவும் வந்து விட்டார். 1498-ஆம் ஆண்டில் ஏற்ற இந்தப் பதவியில் 1512ஆம் ஆண்டுவரை, பதினைந்து ஆண்டுகள் நிலைத்து இருந்திருக்கிறார். இதற்கிடையே இவர் இத்தாலியில் உள்ள சிறிய அரசவைகளுக்கும் ஐரோப்பாவில் உள்ள பல ராஜ்யத் தலைநகரங்களுக்கும் பிளாரென்ஸ் ராஜ்யத்தின் தூதராகப் போயிருக்கிறார். இப்படிப் பல தேசங்களுக்கும் போய்வந்ததன் பலனாக அரசியலைப் பற்றியும், ஐரோப்பிய நாடுகளைப் பற்றியும் நன்றாக அறிந்து அவற்றைப் பற்றித் தனக்குள் ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. 1503-ஆம் ஆண்டு ரோமாக்னாகோமகன் சீசர் போர்ஜியாவிடம் தூது சென்று திரும்பியபோது. இவர் தன்னுடைய ஆர்வத்தை இராணுவத் துறையில் செலுத்த ஆரம்பித்தார். இராணுவத் துறையில் தன் அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொண்ட பிறகு, 1506ஆம் ஆண்டில் இவருக்குப் புதிய பதவியொன்றும் வழங்கப்பட்டது.
பிளாரென்ஸ் ராஜ்யத்திற்காகவென்று ஒரு மக்கள் படையமைப்பை ஏற்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்ட ஒரு துறைக்கு இவர் செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில ஆண்டுகளில் இவர் மிகுந்த செல்வாக்கையடைந்தார். 1512-ஆம் ஆண்டில் பழைய ராஜ வமிசத்தினரான மெடிசி குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்திற்கு நகர ராஜ்யத்தின் ஆட்சியுரிமை திரும்பவும் உட்பட்டபோது, மாக்கியவெல்லி பதவியினின்றும் நீக்கப்பட்டார்.
மெடிசி குடும்பத்தினருக்கு எதிராக, அவர்களின் அரசுரிமையைக் கவிழ்ப்பதற்காக ஒரு சதி நடந்தது. அந்தச் சதியில் கலந்து கொண்டவர்களில் மாக்கியவெல்லியும் ஒருவர் என்று சந்தேகம் எழுந்தது. அதற்காக இவரைப் பிடித்து 1513-ஆம் ஆண்டில் ஒரு விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் இவர் விடுவிக்கப்பட்டார்.
மாக்கியவெல்லி தன் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பிறகு, பிளாரென்ஸிலிருந்து பனிரெண்டு மைல் தொலைவில் இருந்த சான்காசியானோ என்று ஊருக்கருகில் இருந்த தன் பண்ணைக்குச் சென்று விட்டார். பதவியிழந்த பிறகு இவரின் பொருளாதார நிலை தாழ்ந்தது. இந்தக் காலத்திலே மாக்கியவெல்லி கவிதைகளையும் இன்பியல் நாடகங்களையும் எழுதினார். 1527ம் ஆண்டு சூன் மாதம் 22ம் நாளன்று வயிற்று வலியின் காரணமாக இறந்தார்.[1]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ நாரா. நாச்சியப்பன் (1993). "சிந்தனையாளன் மாக்கியவெல்லி". நூல். பிரேமா பிரசுரம். pp. 10–20. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)