உள்ளடக்கத்துக்குச் செல்

நிணநீர்க்கணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிணநீர்க்கணு
இலத்தீன் nodus lymphaticus
நிணநீர்க்கணு (1) உறை (capsule) (2) உறைக்குள்ளான குழிவு (sinus) (3) முளை மையம் (germinal center) (4) நிணநீர் நுண்கணு (lymphoid nodule) (5) தாங்குநார் (trabeculae)

நிணநீர்க்கணு (Lymph Node) என்பது நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கு வகிக்கும் சிறிய பந்துபோன்ற ஒரு உள் உடல் உறுப்பு. நிணநீர்க்கணுக்கள் உடல் முழுவதுமாக பல இடங்களிலும் பரவி இருப்பதுடன், நிணநீர்க்கலன்களால் இணைக்கப்பட்டிருக்கும். இவை நோயெதிர்ப்பு சரியான முறையில் நடைபெறுவதற்கு இன்றியமையாதவை ஆகும். வெளியிலிருந்து வரும் பொருட்களுக்கு ஒரு வடிகட்டி போல அல்லது பொறி போல தொழிற்பட்டு, அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

நோயைக் கண்டறிவதிலும், இந்த நிணநீர்க்கணுக்கள் உதவியாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில நோய்நிலைகளில் அழற்சிக்குட்படுவதுடன், இக்கணுக்கள் பெருத்தும் காணப்படும். இந்நிலை தொண்டை அழற்சி போன்ற நோய்களில் எளிமையாகவும், புற்றுநோய் போன்ற நோய்களில் உயிருக்கே இடர் விளைவிப்பதாகவும் இருக்கும். இவ்வாறான நிலைகளில் உயிரகச்செதுக்கு மூலம் இவை ஆராயப்படும். சில நோய்களில் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட விதத்தில் நிணநீர்க்கணுக்கள் இவ்வகையான மாற்றத்தைப் பெறுவதால் நோய் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.

தொழிற்பாடு

[தொகு]

நோய்க்காரணிகள் அல்லது கிருமிகள் உடலின் எந்த ஒரு பகுதியையாவது தாக்கினால் உடலில் தொற்றுநோய் ஏற்படலாம். இந்நோய்க்காரணிகளை பிறபொருளெதிரியாக்கிகள் எனக் கூறலாம். இவ்வாறு ஏற்படும் நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க, நிணநீர்க் கலங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். நிணநீர்க்கணுக்களையும் உள்ளடக்கிய நிணநீர் உறுப்புகளில், இந்த பிறபொருளெதிரியாக்கிகளுடன் நிணநீர்க் கலங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பைக் காட்டும். நிணநீர்க்கணுக்களில் B உயிரணுக்கள் மிக விரைவாகப் பெருக்கம் அடைவதனால், நிணநீர்க் கலங்கள் வீங்கிக் காணப்படும்.

அமைப்பு

[தொகு]
நிணநீர்க் குழிகளின் (lymph sinus) ஊடாக நிணநீர் ஓட்டத்தைக் காட்டும் நிணநீர்க்கணு ஒன்றின் வரிப்படம். *வெளிக்காவும் நிணநீர்க் கலன் (afferent lymph vessel) *தாங்கு நார்கள் (trabeculae) *மையவிழையக் குழி (medullary sinus) *மேலுறைக்குக் கீழான குழி (subcapsular sinus) *மெதுவாக அசையும் நிணநீர் (slow flowing lymph) *நிணநீர்க் குழியம் (Lymphocyte) *நுண்வலை நார் (reticular fibre) *மேற்பட்டைக் குழி (cortical sinus) *மையவிழையம் (medulla) *மேல் உறை (capsule) *நுழைவுப் பகுதியூடாக உட்செல்லும் குருதிக் கலன் (blood vessel entering the hilum) *வெளியேறும் நிணநீரிலுள்ள நிணநீர்க் குழியங்கள் *வெளிக்காவும் நிணநீர்க் கலன் (efferent lymph vessel) குறிப்பு: வெளியேறும் நிணநீரானது அதிகளவில் நிணநீர்க் குழியங்களைக் கொண்டுள்ளது

மனித நிணநீர்க்கணுவானது, சாதாரண நிலையில், சில மில்லிமீற்றரில் இருந்து 1-2 சென்ரிமீட்டர் வரை அளவுடையதாகவும், அவரை விதை வடிவம் கொண்டதாகவும் இருக்கும்[1]. அழற்சி, தொற்றுநோய், கட்டி போன்ற காரணங்களால் இவற்றின் அளவு பெரியதாகலாம். இப்படியான நிலைகளில், நிணநீர்க்கணுவின் உள்ளே வரும் வெண்குருதியணுக்கள் அதிகமாக இருப்பதனால் இந்த வீக்கம் காணப்படும். சிலசயம் உடல்நலத்துடன் இருக்கும் ஒருவரிலும், ஏற்கனவே ஏற்பட்ட ஒரு நோய்த் தொற்று தொடர்பிலும் இவ்வகையான வீக்கம் காணப்படும்.

நிணநீர்க்கணு நார்த்தன்மைவாய்ந்த ஓர் உறையால் (capsule) சூழப்பட்டிருக்கும். இந்த உறை நிணநீர்க்கணுவின் உட்புறமாக சில இடங்களில் நீண்டு, தடுப்புகளை (trabeculae) உருவாக்கியிருக்கும். நிணநீர்க்கணுவின் அமைப்பு புறவணி அல்லது மேற்பட்டை (cortex) என்னும் வெளிப்பகுதியையும், மையவிழையம் (medulla) என்னும் உட்பகுதியையும் கொண்டிருக்கும். மையவிழையம் பொதுவாக மேற்பட்டையால் சூழப்பட்டிருக்கும். நிணநீர்க்கலன் (Lymph vessel) உள் நுழையும் பகுதியான, நுழைவுப்பகுதியில் (Hilum) மட்டும் மையவிழையம் வெளி மேற்பரப்புடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும்.[1]

நிணநீர்க்கணுக்களின் உள்ளே மீண்மநார்ப் பொருள் (elastin) எனப்படும் மெல்லிய நுண்வலை நார்களும், வேறு நுண்வலை நார்களும் (reticular fibres) இணைந்து ஒரு நுண்வலையமைப்பை உருவாக்கி நிணநீர்க்கணுவைத் தாங்கி உதவும். இந்த நுண்வலையமைப்பானது, நிணநீர்க்கணுக்களைத் தாங்கி நிற்பதோடு அல்லாது, நிணநீர்க் கலங்கள், கிளையி உயிரணுக்கள், பெருவிழுங்கிகள் ஆகியவற்றை ஒட்டிப் பற்றிக் கொள்வதற்கான அமைப்பாகவும் இருக்கும். இது நோயெதிர்ப்பு கலங்கள் முதிர்ச்சியடைவதற்கும், தூண்டப்பட்டு தொழிற்படுவதற்கும் தேவையான வளர்ச்சி, ஒழுங்குபடுத்தும் காரணிகளை வழங்குவதுடன், அகவணி நுண்சிரைகளூடாக (endothelial venules) குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் பதார்த்தங்கள் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும்.[2].

இவ்வலையமைப்பின் உள்ளே, அதிகளவில் நிணநீர்க்கலங்களை உள்ளடக்கிய வெண்குருதியணுக்கள், நுண்குமிழ் (follicle) வடிவத்தில் மேற்பட்டைப் பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கும். ஒரு பிறபொருளெதிரியாக்கியினால் உடலானது தாக்கத்துக்கு உட்படுகையில், முளைமையம் (germinal centre) உருவாகும்போது, இந்த நுண்குமிழ்களின் எண்ணிக்கையும், அதன் கட்டமைப்பும் மாற்றமடையும்.[1]

நிணநீர்க்கணுக்களில், நிணநீர்ப்பைக் குழிவுகளினூடாக (lymph sinuses) நிணநீரானது செல்லும். உட்காவும் நிணநீர்க் கலன்களூடாக நிணநீர்க்கணுக்களினுள் கொண்டு வரப்படும் நிணநீரானது, அங்கே வடிகட்டப்பட்டு, நிணநீர்க் குழிவுகளினூடாக கடத்தபட்டு, மீண்டும் வெளிக்காவும் நிணநீர்க் கலன்களூடாக வெளியே கொண்டு செல்லப்படும்.

மேற்பட்டை

[தொகு]

மேற்பட்டைப் பகுதியில், உறைக்குக் கீழாக உள்ள நிணநீர்ப்பைக் குழிவுகளூடாக (subcapsular sinuses) வடிக்கப்படும் நிணநீர், பின்னர் தடுப்புகளிலுள்ள நிணநீர்ப்பைக் குழிவுகளூடாக (trbecular sinuses), மையவிளைய நிணநீர்ப்பைக் குழிவினுள் (medulla sinus) செல்லும்.

மேற்பட்டையின் வெளிப்பகுதியில் அதிகளவில் B உயிரணுக்கள் நுண்குமிழ் வடிவங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இவை ஒரு பிறபொருளெதிரியாக்கியின் தாக்கத்திற்கு உட்படுகையில், முளையமையத்தை உருவாக்கும். மேற்பட்டையின் ஆழமான பகுதியில் பொதுவாக T உயிரணுக்கள் காணப்படும்.

மையவிழையம்

[தொகு]
  • மையவிழையமானது அதிகளவில் பிறபொருளெதிரியை உருவாக்கும் Plasma cells, மற்ரும் B உயிரணுக்கள், பெருவிழுங்கிகளைக் கொண்டிருக்கும்.
  • மேற்பட்டை நிணநீர்ப்பை குழிவுகளிலிருந்து வரும் நிணநீர், மையவிழையத்தை ஊடறுத்துச் செல்லும், மையவிழைய நிணநீர்க்குழிவுகளூடாகச் சென்று, வெளிக்காவும் நிணநீர்க் கலன்களை அடையும். இந்த நிணநீர்ப்பை குழிவுகளில் பெருவிழுங்கிகள், நுண்வலை நார்களை உருவாக்கும் நுண்வலை உயிரணுக்களும் காணப்படும்.

மனித உடலில் நிணநீர்க்கணுக்களின் அமைவிடம்

[தொகு]
நிணநீர் இழையம் காணப்படும் இடங்கள்

மனித உடலின் பல பகுதிகளிலும் இந்த நிணநீர்க்கணுக்கள் பரந்து காணப்படும்.

தலை, கழுத்துப் பகுதிகளில் நிணநீர்க்கணுக்கள்

[தொகு]
  • முன் கழுத்தில்: sternocleidomastoid தசைகளுக்கு மேலாகவும், கீழாகவும் அமைந்து, கழுத்துப் பகுதியில் மேற்பரப்பிலும், ஆழமாகவும் சில நிணநீர்க்கணுக்கள் காணப்படும். இவை தொண்டை, குரல்வளை, அடிநாச் சுரப்பிகள், கேடயச் சுரப்பி ஆகியவற்ரில் இருந்து நிணநீரை வடிகட்டும்.
  • பின் கழுத்தில்:> sternocleidomastoid தசைகளுக்குப் பின்புறமாகவும் trapezius தசைக்கு முன்புறமாகவும் சில நிணந்ரீக்கணுக்கள் அமைந்திருக்கும். இவை பொதுவாக மேல் சுவாசப்பாதை தொற்றுக்களின்போது வீங்கிக் காணப்படும்.
  • Tonsillar OR Sub-mandibular: கீழ்த்தாடை எலும்பின் சாய்வான பகுதிக்குக் கீழாக அமைந்திருக்கும். இவை உள்நாக்கு, வாயின் அடிப்பகுதிகள், தாடைப்பற்கள் போன்ற இடங்களிலிருந்து நிணநீரை வடிகட்டும்.
  • நாடிக்குக் கீழ்: நாடிக்குக் கீழாக அமைந்திருக்கும் நிணநீர்க்கணுக்கள் வெட்டுப் பற்கள், கீழுதட்டின் நடுப்பகுதி, நாக்கின் நுனி போன்ற இடங்களில் இருந்து நிணைநீரை வடிகட்டும்.
  • காறை எலும்புக்கு மேலாக உள்ள குழிப் பகுதியில், நெஞ்செலும்பை (sternam) சந்திக்கும் இடத்தில் பக்கவாட்டாக நிணநீர்க்கணுக்கள் காணப்படும். இவை நெஞ்சுக்குழி (thoracic cavity), வயிறு ஆகிய பகுதிகளில் இருந்து நிணநீரை வடிகட்டும்.

நெஞ்சுப் பகுதியிலுள்ள நிணநீர்க்கணுக்கள்

[தொகு]

நுரையீரல் பகுதியில், மூச்சுக்குழாய், களம், மார்பு வயிற்றிடை மென்றகடு போன்ற இடங்களில் பல நிணநீர்க்கணுக்கள் உள்ளன.

ஏனைய நிணநீர்க்கணுக்கள்

[தொகு]

கை, கால், வயிறு போன்ற பகுதிகளிலும் நிணநீர்க்கணுக்கள் காணப்படும்.

நோயியல்

[தொகு]
பெருங்குடல் குதப் புற்றுநோய் உடன் காணப்படும் நிணநீர்க்கணுவின் நுணுக்குக்காட்டித் தோற்றம்

பல்வேறுபட்ட தொற்றுநோய்கள், ஏனைய நோய் நிலைகளில், நிணநீர்க்கணுக்கள் வீங்கிப் பெருத்து நோயுள்ள பகுதியாகத் தோற்றமளிக்கும்.

மேலதிக படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Warwick, Roger (1973) [1858]. "Angiology (Chapter 6)". Gray's anatomy. illustrated by Richard E. M. Moore (Thirty-fifth ed.). London: Longman. pp. 588–785. {{cite book}}: |access-date= requires |url= (help); Unknown parameter |coauthors= ignored (help)
  2. Kaldjian, Eric P.; J. Elizabeth Gretz, Arthur O. Anderson, Yinghui Shi and Stephen Shaw (October 2001). "Spatial and molecular organization of lymph node T cell cortex: a labyrinthine cavity bounded by an epithelium-like monolayer of fibroblastic reticular cells anchored to basement membrane-like extracellular matrix". International Immunology (Oxford Journals) 13 (10): 1243–1253. doi:10.1093/intimm/13.10.1243. பப்மெட்:11581169. http://intimm.oxfordjournals.org/cgi/content/full/13/10/1243. பார்த்த நாள்: 2008-07-11. 

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lymph nodes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிணநீர்க்கணு&oldid=3679496" இலிருந்து மீள்விக்கப்பட்டது