உள்ளடக்கத்துக்குச் செல்

புராணா கிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புராணா கிலா கோட்டைச் சுவர்களும் வெளியேயுள்ள ஏரியும், தில்லி

புராணா கிலா (இந்தி: पुराना क़िला, உருது: پُرانا قلعہ, மொழிபெயர்ப்பு: பழைய கோட்டை)என்பது முகலாயப் பேரரசர் உமாயூனால் 1533 ஆம் ஆண்டில் தொடங்கி நிறுவப்பட்ட தினா-பனா என்னும் நகரத்தின் உள் நகரப் பகுதியாகும். புராணா கிலாவும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் தில்லியின் பத்தாவது நகரமாகத் திகழ்ந்தது. 1540 ஆம் ஆண்டில் சேர் சா சூரி, உமாயூனைத் தோற்கடித்த பின்னர் இக் கோட்டையின் பெயரை "சேர்கர்" என மாற்றியதுடன் ஐந்து ஆண்டுகள் நீடித்த தனது ஆட்சிக் காலத்தில் மேலும் பல அமைப்புக்களை இத்தொகுதியுள் கட்டினார். 1545 ல் சூரி இறந்ததும் அவரது வாரிசுகள் பலமானவர்களாக இல்லாததால் சூரி வம்ச ஆட்சி பலமற்றுப் போனது. 15 ஆண்டுகளுக்குப் பின் 1555 ஆம் ஆண்டில் உமாயூன் மீண்டும் புராணா கிலாவையும், தில்லியின் ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்டார். எனினும் அவரது ஆட்சி அதற்குமேல் ஓராண்டு மட்டுமே நீடித்தது. 1556 ஆம் ஆண்டில் கோட்டைக்குள் நிகழ்ந்த விபத்து ஒன்றில் உமாயூன் இறந்தார்.

இக் கோட்டையின் மதில் 18 மீட்டர்கள் உயரமானது. 1.5 கிலோ மீட்டர்கள் நீளத்துக்குக் கட்டப்பட்டுள்ல இம்மதிலில் மூன்று வளைவமைப்புக் கொண்ட நுழைவாயில்கள் உள்ளன. மேற்கு நோக்கியிருப்பது பாரா தர்வாஸ் (பெரிய வாயில்) என அழைக்கப்படுகிறது. இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தெற்குப்புறம் உள்ளது உமாயூன் நுழைவாயில். உமாயூனால் கட்டப்பட்டதால் அல்லது இங்கிருந்து பார்க்கும்போது உமாயூனின் சமாதி தெரிவதால் இப் பெயர் பெற்றிருக்கக்கூடும். மூன்றாவது தடைசெய்யப்பட்ட நுழைவாயில் எனப் பொருள்படும் "தலாக்கி" நுழைவாயில். எல்லா நுழைவாயில்களுமே சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட அமைப்புக்களாகும். இவற்றின் இருபக்கங்களிலும் மிகப் பெரிய அரைவட்ட வடிவான கொத்தளக் கோபுரங்கள் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புராணா_கிலா&oldid=3081270" இலிருந்து மீள்விக்கப்பட்டது