உள்ளடக்கத்துக்குச் செல்

மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம் என்பது, தமிழகத்தின் கிழக்குக் கரையோரத்தில் சென்னைக்குத் தெற்கே உள்ள பழங்காலத் துறைமுக நகரான மாமல்லபுரத்தில், அங்குள்ள மலையின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாறையில் குடையப்பட்டுள்ள குடைவரைக் கோயில். மாமல்லபுரத்தில் காணப்படும் பல குடைவரைக் கோயில்களுள் இதுவும் ஒன்று. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இது ஒரு சிறிய குடைவரை.

இங்குள்ள மண்டபத்தில் ஒரு தூண் வரிசை மட்டுமே உண்டு. இதில் இரண்டு முழுத் தூண்களும், பக்கச் சுவர்களை அண்டி இரு அரைத்தூண்களும் காணப்படுகின்றன. முழுத்தூண்களின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் சதுர அமைப்பிலும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை வடிவிலும் உள்ளன. பின்பக்கச் சுவரில் கருவறை குடையப்பட்டுள்ளது. இக்கருவறை பின்புறச் சுவரில் இருந்து முன்னோக்கித் துருத்தியவாறு அமைந்துள்ளது. கருவறையின் இருபுறமும் காவற்பெண்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனால் இது கொற்றவைக்கு உரிய கோயிலாக இருக்கவேண்டும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1]

இக்குடைவரையின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இது முதலாம் நரசிம்மவர்மன் காலத்துக்கு உரியது என்கின்றனர். இங்கு கல்வெட்டு இருந்தபோதும் அதில் இது எந்த மன்னன் காலத்தில் கட்டப்பட்டது என அறிந்துகொள்வதற்கான குறிப்புக்கள் இல்லை. இக்கல்வெட்டில் காணப்படும் "சிறீ வாமங்குசன்" என்னும் பெயர் பல்லவர்களின் சிற்ரரசனாக இருக்கக்கூடும் என்பது ஆய்வாளர் கருத்து.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 69
  2. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 69