உள்ளடக்கத்துக்குச் செல்

வானியற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
NGC 4414, சுருள் பால்வெளி வகையைச் சேர்ந்த கோமா பெரனைசெசு உடுத்தொகுதியிலுள்ள ஒரு அண்டம், இதன் விட்டம் 56,000 ஒளியாண்டுகளாகும். இது 60 மில்லியன் ஒளியாண்டு தூரத்திலுள்ளது.

வானியற்பியல் (Astrophysics), வானியல் துறையின் ஒரு பிரிவாகும். இது, விண்மீன்கள், விண்மீன்பேரடைகள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான ஒளிர்மை, அடர்த்தி, வெப்பநிலை, வேதியியற் கூறுகள் போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் இயற்பியல் பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், விண்மீன்களிடை ஊடகம், வான் பொருட்களிடையேயான இடைத்தொடர்புகள் என்பவை பற்றி ஆராய்வதும் இத் துறையின் எல்லையுள் அடங்குகிறது. பாரிய அளவுகள் சார்ந்த கோட்பாட்டு வானியற்பியல் ஆய்வு அண்டவியல் எனப்படுகின்றது.

வானியற்பியல் பரந்த ஒரு துறையாக இருப்பதால், வானியற்பியலாளர்கள், இயக்கவியல் (mechanics), மின்காந்தவியல், வெப்ப இயக்கவியல், புள்ளியியல் இயக்கவியல், குவைய இயக்கவியல் (quantum mechanics), சார்புக் கோட்பாடு, அணுக்கரு இயற்பியல், அணுத்துகள் இயற்பியல், அணு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல் போன்ற இயற்பியலின் பல துறைகளையும் வானியற்பியல் ஆய்வுகளில் பயன்படுத்துகிறார்கள். நடைமுறையில், தற்கால வானியல் ஆய்வுகளுடன் பெருமளவு இயற்பியல் தொடர்புபட்டுள்ளது.[1][2][3]

வரலாறு

[தொகு]

வானியல் தனக்கென ஒரு பழைமையான வரலாற்றைக் கொண்டிருப்பினும், இயற்பியற் புலத்தில் இருந்து நீண்டகாலமாக பிரிந்திருந்துள்ளது. அரிசுடாட்டில் கருத்தின்படி விண்பொருட்கள் சீரான கோளவடிவத்தையுடையனவும், வட்ட ஒழுங்குகளைக் கொண்டுள்ளனவுமாகக் கருதப்பட்டன. எனினும் புவிமையக் கோட்பாடு அக்கருத்திலிருந்து விலகியது. இதனால் இவ்விரு கருத்துக்களும் தொடர்பற்றனவாகக் காணப்பட்டன.

சாமோசு நகர அரிசுடாக்கசு என்பவர், புவியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன எனக் கருதுவதன் மூலம் வான் பொருட்களின் இயக்கத்தை விவரிக்க முடியுமெனக் குறிப்பிட்டார். ஆனால், புவிமையக் கோட்பாடு வேருன்றியிருந்த அக்காலகட்டத்தில் சூரியமையக் கோட்பாடு முரண்பட்டதும், கேலிக்குரியதுமாக இருந்தது. கி.பி. 16ம் நூற்றாண்டில் கோப்பர்நிக்கசின் சூரியமையக் கோட்பாடு உருவாகும் வரை பல நூற்றாண்டு காலத்துக்கு புவிமையக் கோட்பாடு ஐயத்துக்கிடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிரேக்க, உரோம வானியலாளரான தாலமியின் அல்மகெஸ்ட் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட புவிமையக் கோட்பாட்டின் செல்வாக்கே இதற்குக் காரணமாயமைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Maoz, Dan (2016). Astrophysics in a Nutshell. Princeton University Press. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1400881178.
  2. "astrophysics". Merriam-Webster, Incorporated. Archived from the original on 10 June 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-05-22.
  3. Keeler, James E. (November 1897), "The Importance of Astrophysical Research and the Relation of Astrophysics to the Other Physical Sciences", The Astrophysical Journal, 6 (4): 271–288, Bibcode:1897ApJ.....6..271K, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/140401, PMID 17796068
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியற்பியல்&oldid=4102934" இலிருந்து மீள்விக்கப்பட்டது