உள்ளடக்கத்துக்குச் செல்

இறந்தோர் நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
D21
Z1
M33
W24
Z1
O1
D21
X1
D54
G17O4
D21
G43N5
Z1
காலம் செல்லலுக்கு உரிய நூல்
படவெழுத்து முறையில்

இறந்தோர் நூல் (Book of the Dead, எகிப்திய மொழி: 𓂋𓏤𓈒𓈒𓈒𓏌𓏤𓉐𓂋𓏏𓂻𓅓𓉔𓂋𓅱𓇳𓏤) என்பது, இறப்புச் சடங்குகள் தொடர்பான பண்டைய எகிப்திய நூலுக்குத் தற்காலத்தில் வழங்கப்பட்டுள்ள பெயர். இது பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியக் காலத்தின் தொடக்கமான கிமு 1550 காலப் பகுதியில் இருந்து ஏறத்தாழ கிமு 50 வரை புழக்கத்தில் இருந்தது.[1] உரையின் அசல் எகிப்தியப் பெயர், என ஒலிபெயர்த்தது rw nw prt m hrw[2] பண்டை எகிப்தியர் இந்நூலுக்கு வழங்கிய பெயரின் ஒலிபெயர்ப்பு "rw nw prt m hrw" என்பதாகும். இங்கே "prt m hrw"[3] என்பது "நாள் கடந்து செல்லல்" என்னும் பொருள் தரக்கூடியது. "rw nw" என்பதை "உரிய மந்திரங்கள்" அல்லது "உரிய நூல்" என்று மொழிபெயர்த்துள்ளனர். எனவே இது "காலம் செல்லலுக்கு உரிய மந்திரங்கள்" அல்லது "காலம் செல்லலுக்கு உரிய நூல்"[4] எனப் பொருள் படும். இந்த நூலில், பண்டை எகிப்தியர்களின் நம்பிக்கைப்படி, இறந்துபோகும் ஒருவர் டுவட் எனப்படும் கீழுலகத்தினூடாக அடுத்த பிறவிக்குள் பயணம் செய்வதற்கு உதவியாக அமையும் மந்திரங்கள் உள்ளன. இந்த நூல், இதற்கு முந்தியவையும், பாபிரஸ் எனும் தடித்த காகிதம் அல்லாமல் பல்வேறு பொருட்களில் வரையப்பட்டுள்ள பிரமிடு உரைகள், சவப்பெட்டி உரைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இறந்தோர் நூலில் காணப்படும் மந்திரங்களில் சில கிமு 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த மேற்படி ஆக்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது. ஏனையவை எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் எனப்படும் கிமு 11 - 7 ஆம் நூற்றாண்டுகள் வரையிலான காலத்தில் சேர்க்கப்பட்டவை. இந்த நூலை இறந்தவர்களின் உடல்களுடன் சவப்பெட்டிகளுள் அல்லது புதைக்கும் அறைகளுள் வைப்பது அக்கால எகிப்தில் வழக்கமாக இருந்தது.

இறந்தோர் நூலில் காணப்படும் தீர்ப்பு வழங்கும் காட்சிகள். முதல் காட்சி இறந்த மனிதனை தீர்ப்பு மண்டபத்துக்கு அழைத்துச் செல்வதையும், அடுத்த காட்சி அம்மனிதனது இதயம் இறகுடன் ஒப்பிட்டு நிறுக்கப்படுவதையும், கடைசிக் காட்சி, சோதனையில் வெற்றியடைந்த மனிதனை ஓசிரிசுக் கடவுளுக்கு முன் நிறுத்துவதையும் காட்டுகின்றன. (பிரித்தானிய அருங்காட்சியகம்)

"இறந்தோர் நூல்" என்பது ஒரு ஒற்றை நூலோ அல்லது ஒரே ஒழுங்கு முறைப்பட்ட ஒரு நூலோ அல்ல. இதுவரை கிடைத்துள்ள இதன் படிகள் வெவ்வேறு விதமாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளடக்கங்களையும், வேறுபாடான படங்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. சிலர், தமது அடுத்த பிறவிக்கு முக்கியமானவை எனத் தாம் கருதும் மந்திரங்களை மட்டும் உள்ளடக்கிப் படியெடுப்பிப்பது வழக்கமாக இருந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது. இவ்வாறான "இறந்தோர் நூல்கள்" பொதுவாகப் பப்பிரசுச் சுருளில் எழுதப்பட்டதுடன், யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய மறுபிறவிக்கான பயணத்தைக் குறிப்பதாகப் படங்களையும் வரைந்தனர்.

வளர்ச்சி

[தொகு]

பிரமிடு உரைகள்

[தொகு]

"இறந்தோர் நூல்", எகிப்தின் பழைய இராச்சியக் காலத்தைச் சேர்ந்த இறப்புச் சடங்குகள் தொடர்பான ஆக்கங்களில் இருந்து வளர்ச்சியடைந்தது. இவற்றுள் முதல் இறப்புச் சடங்கு நூல் பிரமிடு உரைகள் ஆகும். இது, கிமு 2400 காலப்பகுதியைச் சேர்ந்த 5 ஆம் வம்சத்து அரசன் உனாசு என்பவனின் பிரமிடில் முதன் முதலாகப் பயன்பட்டது.[5] இந்த நூல் பிரமிடின் அடக்க அறையின் சுவர்களில் எழுதப்பட்டது. தொடக்கத்தில் மன்னர்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே எழுதப்பட்ட இது, 6 ஆவது வம்சத்துக்குப் பின்னர் அரசியின் பயன்பாட்டுக்காகவும் எழுதப்பட்டது. பிரமிடுகளில் இருக்கும் எழுத்துக்கள் வழக்கத்துக்குப் புறம்பான படவெழுத்துப் பாணியில் உள்ளன. மனிதர்கள், விலங்குகள் என்பவற்றைக் குறிக்கும் படவெழுத்துக்கள் பல முற்றுப்பெறாமலோ அல்லது சிதைக்கப்பட்டோ உள்ளன. இது, அவற்றால் இறந்த பார்வோனுக்குத் தீங்கு ஏற்படாமல் காப்பதற்காக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்[6] பிரமிடு உரைகளின் நோக்கம், இறந்த அரசன் கடவுளருக்குள் தனது இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, குறிப்பாக அரசனது கடவுட் தந்தையான "இரா" எனும் சூரியக் கடவுளுடன் இணைந்து கொள்ள உதவுவதாகும். பிரமிடு உரைகளின் காலத்தில், மறு பிறப்பு வானத்தில் உள்ளதாகக் கருதப்பட்டது. இது, மறு பிறப்பு கீழ் உலகத்தில் உள்ளது என "இறந்தோர் நூல்" கூறுவதற்கு மாறானது.[6] பழைய இராச்சியக் காலத்துக்குப் பின்னர், பிரமிடு உரைகள் அரச குடும்பத்தினருக்கு மட்டுமே என்று இருந்த நிலை மாறி, மாகாண ஆட்சியாளர்களும், உயர் அலுவலர்களும் கூட இவ்வுரைகளைப் பயன்படுத்தலாயினர்.

குறிப்புகள்

[தொகு]
  1. Taylor 2010, p.54
  2. Allen, 2000. p.316
  3. Allen, 2000. p.316
  4. Taylor 2010, p.55; or perhaps "Utterances of Going Forth by Day" - D'Auria 1988, p.187
  5. Faulkner p. 54
  6. 6.0 6.1 Taylor 2010, p. 54

மேலும் அறிந்து கொள்ள

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறந்தோர்_நூல்&oldid=3767544" இலிருந்து மீள்விக்கப்பட்டது