ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக இந்திய நடுவண் அரசால் நிர்வகிக்கப்படுகிறது.[1] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன.
இவற்றில் புதுச்சேரி, தில்லி மற்றும் சம்மு காசுமீர் ஆகிய மூன்று ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றத்துடன் கூடிய தகுதி உடையனவாகும். மற்ற ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றங்கள் இன்றி, நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் நிருவகிக்கப்படுகிறது. தில்லி மற்றும் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதிகளுக்கு தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், சட்டங்கள் இயற்றுவதற்கு முன், சட்ட முன்மொழிவுகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது. இந்த 3 ஒன்றியப் பகுதிகளுக்கு துணைநிலை ஆளுநர் தலைமை தாங்குவார்.