பயனெறிமுறைக் கோட்பாடு
பயனெறிமுறைக் கோட்பாடு அல்லது பயனோக்கு கோட்பாடு (Utilitarianism) என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த பயனுடைமையைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான மெய்யியல் கோட்பாடு ஆகும். இது ஒரு வகையான விளைவுநெறிமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி பயனுடைமை என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் பண்டமாகக் கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சி மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீட்டர் சிங்கர் போன்ற விருப்பச்சார்பு பயனோக்காளர்கள் எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது மாக்களையும் உட்படுத்தி புலனுணர்வு பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர்.
வரலாறு
[தொகு]மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற கிரேக்க மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக, இதைத் துவக்கத்தில் ஜெரமி பெந்தாம்தான் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.[1] அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் பண்டமெனக் கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "பெருமகிழ்ச்சிக் கோட்பாடு" என தனது கோட்பாட்டைத் திருத்திக் கொண்டார்.
இவற்றையும் காண்க
[தொகு]குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Rosen, Frederick (2003). Classical Utilitarianism from Hume to Mill. Routledge, pg. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-22094-7 "It was Hume and Bentham who then reasserted most strongly the Epicurean doctrine concerning utility as the basis of justice."