பாலக்காட்டுக் கணவாய்
பாலக்காட்டுக் கணவாய் | |
---|---|
தமிழ்நாட்டுப் பக்கத்தில் இருந்து பாலக்காட்டின் தோற்றம் | |
அமைவிடம் | தமிழ்நாடு - கேரளா, இந்தியா |
மலைத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலைகள் |
பாலக்காட்டுக் கணவாய் (Palakkad Gap) மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 30-40 கிமீ அகலத்தில் அமைந்த ஒரு கணவாய் ஆகும். இதுவே இம்மலைத் தொடரின் தாழ்வான பகுதி. இது கேரள மாநிலத்தின் பாலக்காட்டு நகருக்கு அருகில் உள்ளது. வடக்கில் நீலகிரி மலையும், தெற்கில் ஆனைமலையும் இதன் எல்லைகளாக இருக்கின்றன.[1]
இக்கணவாய் இல்லையெனில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் கேரள மாநிலத்தை தனிமைப் படுத்தியிருக்கும், இதுவே அருகிலுள்ள தமிழகத்துடன் இன்னும் குறிப்பாக கூறுவதானால் இந்திய நிலப்பரப்புடன் கேரளத்தை இணைக்கிறது.
இக்கணவாய் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தையும் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தையும் இணைக்கும் பாதையாக உள்ளது. இது கேரளாவின் முதன்மையான வணிக வழித்தடமும் ஆகும். சாலை வழியாக கேரளத்தை அடையும் பெருமளவிலான பொருட்கள் இக்கணவாய் வழியாகவே செல்லுகின்றன.
இக்கணவாய் தென்இந்தியாவின் தட்பவெப்பத்தில் சிறப்பான மாற்றத்தை உண்டுபண்ணுகிறது. இது ஈரப்பதம் நிறைந்த தென்மேற்கு பருவக்காற்று கோயம்புத்தூர் பகுதிக்கு வர உதவுகிறது. இக்காரணத்தால் கோயம்புத்தூர் பகுதி கோடை காலத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட வெப்பம் குறைந்து காணப்படுகிறது.
காற்று ஆற்றல்
[தொகு]மேற்கில் இருந்து வீசும் காற்றை இக்கணவாய் புனல் போல் செயல்பட்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு வேகமாக அனுப்புகிறது. சராசரியாக மணிக்கு 18 முதல் 22 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது.[2] தமிழகத்தில் மிக அதிகமாக காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[3] உடுமலைப்பேட்டை, கடத்தூர் சுற்றுப்பகுதிகளில் பெரிய காற்றாலைகளைக் காணமுடியும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Britannica Encyclopedia". பார்க்கப்பட்ட நாள் 8 March 2015.
- ↑ "TamilNadu Energy Development Agency". Archived from the original on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 6 November 2013.
- ↑ "Tiruppur District Official Webpage". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 6 November 2013.