இத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். ஆனால் இத்தேர்தல் 514 தொகுதிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் அசாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய பிரிவினைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. சில மாதங்கள் கழித்து 1985ம் ஆண்டு நடைபெற்றது. முந்தைய தேர்தலில் வென்று பிரதமரான இந்திரா காந்தி 1984 அக்டோபரில் தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் அவரது இளைய மகன் ராஜீவ் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தலைவாகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கபட்டார். நாடாளுமன்ற மக்களவைக்கு 6 மாதங்கள் மட்டுமே வாழ்நாள் மீதம் இருந்ததால், 1984யிலேயே இராஜீவ் தலைமையிலான ஒன்றிய அரசு பரிந்துரைப்படி, குடியரசு தலைவர் மக்களவையை கலைத்தார். மக்களவைக்கு பொது தேர்தல் அறிவிக்கப்பட்டது.. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமராகவே தான் இருக்க விரும்புவதாக இராஜீவ் தெரிவித்தார். இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட நாடளாவிய அனுதாப அலையால் காங்கிரசு பெருவெற்றி கண்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியே எந்த கட்சியும் 51 இடங்களில் வெல்லவில்லை. இத்தேர்தலில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சிகளோ கூட்டணிகளோ எதுவும் ஏற்படவில்லை. காங்கிரசுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேச மாநிலக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி வந்தது. தேசிய அளவில் எதிர்க்கட்சியான முதல் மாநில கட்சி என்ற நிலையை தெலுங்கு தேசம் கட்சி பெற்றது. சில மாதங்கள் கழித்து அசாமிலும் பஞ்சாபிலும் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டசபை பொது தேர்தல்களிலும் காங்கிரசு பெருவாரியான இடங்களை வென்றது.